குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு: கிருஷ்ணகிரிக்கு பயங்கரவாதியை அழைத்து வந்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான், பிகார் மாநிலம் புத்த கயா ஆகிய இடங்களில்  வெடிகுண்டு தாக்குதல் நடத்திய

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான், பிகார் மாநிலம் புத்த கயா ஆகிய இடங்களில்  வெடிகுண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி கவுசாவை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து தேசிய புலனாய்வுப் பிரிவினர்  திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர். 
மேற்கு வங்க மாநிலத்துக்குள்பட்ட  பர்த்வானில் 2014 - ஆம் ஆண்டும், பிகார் மாநிலம் புத்த கயாவில்  2018-ஆம் ஆண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.
இந்தத் தாக்குதலில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து, தேசிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த ஜே.எம்.பி. அமைப்பின் தலைவர் கவுசா (எ) முனீர் (எ) ஜஹிதுல் இஸ்லாம் (39) என்பவரை, தேசிய புலனாய்வுப் பிரிவினர், கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கைது செய்தனர்.  விசராணையில் அவர், வங்கதேசத்தில், ஜமால்பூர் மாவட்டம், சோகாவிக்கே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், பர்த்வான், புத்தக கயா ஆகிய இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  மேலும், கர்நாடக மாநிலம், சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டுத் தயாரிப்பு வழக்கு உள்பட சில வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணதேவராயர் (எ) சையத் பாஷா மலையில்  பயங்கரவாதி கவுசா பதுங்கி இருந்தபோது, வெடிகுண்டுகள் தயாரித்ததும், வெடிகுண்டு பரிசோதனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சி.வி.சுப்பாரெட்டி தலைமையில், 4 வாகனங்களில் 14 பேர் அடங்கிய குழுவினர், பயங்கரவாதி கவுசாவை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். 
இதைத் தொடர்ந்து, காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் நடைபெற்ற விசாரணையின் போது,  வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குழாய்,  மஞ்சள்,  கருப்பு,  சிகப்பு நிற வயர்கள், தீப்பெட்டி,  செலோ டேப்புகள்,  மரத்திலான சில பொருள்கள் உள்ளிட்ட பொருள்களையும் அவர்கள் சேகரித்தனர். இதையடுத்து விசாரணையை முடித்துக் கொண்டு,  தேசிய புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாதி கவுசாவை பெங்களூருக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். 

2-வது பயங்கரவாதியை அழைத்து வந்து விசாரணை!
பெங்களூரை அடுத்த தொட்டபல்லாபூரில் ஜமாத் உல் முஜாஹீன் பங்களாதேஷ்  பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி  ஹபீப் உர் ரஹமான் ஷேக் (28) என்பவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஜூன் 25-இல் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணதேவராயர் (எ) சையத்பாஷா மலையில் வெடிகுண்டை வெடிக்க வைத்து சோதனை செய்ததும், பர்த்வானில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஹபீப் உர் ரஹமான் ஷேக்கை, கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
தற்போது, பயங்கரவாதி கவுசாவை தேசிய புலனாய்வுப் பிரிவினர் அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com