Enable Javscript for better performance
ஒசூர் ஒன்றியத்தில் ஏரிகளில் தூர்வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் ஒன்றியத்தில் ஏரிகளில் தூர்வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 25th September 2019 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் ஒன்றியம், பாகலூர் ஊராட்சிக்குள்பட்ட ஜீமங்கலம் குளம்,  லிங்காபுரம் ஏரி,  சேவகானப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட சொக்கரசனப்பள்ளி ஏரிகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
    இதையடுத்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 9 கோடியே 25 லட்சம் மதிப்பில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 100 ஏரிகள், 425  குளம், குட்டைகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 44 ஏரிகள்,  169 குளம், குட்டைகள் என 213  நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 100 சதவிகிதம் குளம், குட்டைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமித்து விவசாய கிணறு, ஆழ்துளைக் கிணறுகளின் நீர் ஆதாரங்களை  பெருக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளும், பொதுமக்களும் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். 
    தினந்தோறும் இப்பணிகளை ஆய்வு செய்து மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும்.  அப்போது தான் மழை நீரை முழுமையாக ஏரி,  குளங்களில் சேமிக்க முடியும். நிலத்தடி நீரை உயர்த்த முடியும் என தமிழக  முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இப்பணியில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்  துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    ஒசூர் ஒன்றியத்தில் மட்டும் 116 ஏரிகள், குளங்கள் உள்ளன. அதில் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் பலவனப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட நஞ்சுகுண்டன் ஏரி,  பாகலூர் ஊராட்சிக்குள்பட்ட லிங்காபுரம் ஏரி,  பாலிகானப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட கனகொண்டப்பள்ளி ஏரி,  முகலூர் ஊராட்சிக்குள்பட்ட மாரி சித்தே கவுடா ஏரி,  எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட சித்த வீரய்யன் ஏரி,  நாகொண்டப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட முகுலா ஏரி, நல்லூர் ஊராட்சிக்குள்பட்ட சித்தனப்பள்ளி ஏரி, சேவகானப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட சொக்கரசனப்பள்ளி ஏரி, தும்மனப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட குண்டுர் கவுடன் ஏரி,  மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட சித்தாரெட்டி ஏரி  என 10 ஏரிகளில் ரூ. 5 லட்சம்  மதிப்பில் தூர்வாரும் பணிகள் தொடங்கின.இதில் 8 ஏரிகளில் பணிகள் முடிவடைந்துள்ள ன.மீதமுள்ள 2 ஏரிகள் பணிகள் விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 26  குளம், குட்டைகளில் தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 18 குளம், குட்டைகளில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளன.
    மேலும், தாய் திட்டம்,  ஜல்சக்தி அபியான் திட்டம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சார்பாக 63 நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள 53  ஏரி குளங்களை இந்த நிதியாண்டில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 
    இந்த ஆய்வின்போது,  ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தா பேகம்,  பாலாஜி, ஒன்றிய பொறியாளர்கள் தமிழ், பணி மேற்பார்வையாளர்  தனலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ்  மற்றும் பலர் உடனிருந்தனர்.  
    ஆட்சியருக்கு பாராட்டு...
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைந்து நடைபெற்ற குடிமராமத்துத் திட்டப் பணிகளால் சமீபத்தில் பெய்த மழையினால்  ஏரிகள், குளங்களில் மழைநீர் நிரம்பி வருகிறது. தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, குடிமராமத்துத் திட்டப் பணிகளை முழு ஈடுபாட்டுடன் விரைந்து செயல்படுத்தி வந்த மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகருக்கு சமூக ஊடங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பணியை விரைந்து தொடங்கி பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆட்சியர் செயல்பட்டார். மேலும் தனியார் துறையின் சமூக பொறுப்புணர்வு நிதியை கூடுதலாக பெற்று பணிகளை சிறப்பாகச்  செயல்படுத்தியதற்கு சமூக ஊடகங்களில்  பாராட்டு குவிந்து வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai