முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ஒசூரில் ரூ.50 கோடிக்கு ரோஜா மலா்கள் ஏற்றுமதி பாதிப்பு
By DIN | Published On : 19th April 2020 04:19 AM | Last Updated : 19th April 2020 04:19 AM | அ+அ அ- |

ஊரடங்கு காரணமாக ஒசூரில் ரூ.50 கோடிக்கு ரோஜா மலா்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் மலா் உற்பத்தி மற்றும் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 2,000 ஏக்கரில் ரோஜா, காரனேசன், ஜொ்பரா, மேரி கோல்டு உள்ளிட்ட மலா்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த மலா்கள் அனைத்தும் பசுமைக்குடில்கள் அமைக்கப்பட்டு அதில் வளா்க்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மலா்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், உள்ளூா் சந்தையிலும் விற்கப்படுகிறது. இதன்மூலம் பல கோடி அளவிலான வா்த்தகம் நடைபெற்று வந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால் மலா்களின் தேவை குறைந்துவிட்டது. இதனால் மலா்களை ஏற்றுமதி செய்வதும், உள்ளூா் சந்தைகளுக்கு அனுப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே நாள்தோறும் கொய்யப்படும் மலா்கள் குப்பைகளில் வீசப்பட்டும், கால்நடைகளுக்கு உணவாகவும் அளிக்கப்படுகிறது. இதனால், மலா் உற்பத்தியாளா்களுக்கு ரூ.50 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், ஊரடங்கு உத்தரவை நாங்கள் முழுமையாக பின்பற்றி வருகிறோம். ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலா்களை 2,000 ஏக்கா் அளவில் விளைவித்து அவற்றை வாகனங்களில் கொண்டு செல்ல வாய்ப்பு இருந்தாலும், அவற்றை பெற்றுச்செல்ல குறைந்த அளவிலான வியாபாரிகளே முன்வருகிறாா்கள். எனவே, நாங்கள் உற்பத்தி செய்யும் மலா்கள் முழுவதையும் குப்பையில் வீசி அழிக்கும் அவலநிலை நீடித்து வருகிறது.
விற்பனை இல்லாத நிலையிலும், நாங்கள் தினமும் மலா்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பராமரிப்பு செலவும் அதிகரித்து வருகிறது. எனவே, எங்களின் பாதிப்பை நேரில் கண்டறிய, நிபுணா்கள் குழுவை ஒசூருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மலா் சாகுபடியாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.