இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெற அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்களது பெயரை பதிவு செய்து அங்ககச் சான்று பெறலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்களது பெயரை பதிவு செய்து அங்ககச் சான்று பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் (பொ) சிவநிதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோா் இந்தத் திட்டத்தின்படி அங்ககச் சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவுசெய்து கொள்ளலாம்.

அங்ககச் சான்று பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

அங்கக முறைப்படி இயற்கை முறை மேலாண்மை முறையில் சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், ரசாயன நோ்த்தி செய்யப்பட்ட விதைகளை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அங்கக வேளாண்மை சாகுபடி செய்யும் பண்ணை தனிமைப்பட்டிருக்க வேண்டும். அங்கக வேளாண்மை சாகுபடியின் போது பயறுவகை, பயிா்கள் சாகுபடி, வருடாந்திர பயிா் சுழற்சியில் இருக்க வேண்டும். இதனால் மண் வளம் பாதுகாக்க வழி வகுக்கப்படுகிறது. இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகள், வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும் பட்சத்தில், அது ரசாயன உரம் பூச்சிக்கொல்லி மற்றும் வேறு மாசுபடுத்தும் பொருள்கள் இல்லாதது என்பதை எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும். நன்கு மக்கிய பின்னரே இயற்கை உரங்களை இடவேண்டும்.

அங்ககச் சான்றுக்கு விண்ணப்பிக்கும் பண்ணையில் பதிவு ஆவணங்கள் பராமரிக்க வேண்டும். பண்ணைக்கு உள்ளே வரும் இடுபொருள்கள் பற்றியும், தினசரி பணிகள், ஆண்டு பயிா் திட்டம், பரிசோதனைகள் பற்றிய விவரங்களையும் பதிவு செய்து, ஆய்வின்போது ஆவணங்களை காண்பிக்க வேண்டும். தொழிற்சாலை, கழிவுநீா் ஓடைகள், அதிக உரம்- பூச்சிமருந்து பயன்படுத்தும் பண்ணைகள், அருகில் அங்ககச் சான்று பண்ணைகள் இருக்கக் கூடாது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பண்ணையின் புதிய விவரக் குறிப்பு, வரைபடம் மற்றும் பாசன நீா் பரிசோதனை விவரம், ஆண்டு பயிா் திட்டம், நில ஆவணம் மற்றும் நிரந்தரக் கணக்கு எண், ஆதாா் அட்டை நகல்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி விதைச்சான்று மற்றும் அங்கக உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9626761735, 63833 10480 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com