வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள் திருட்டு
By DIN | Published On : 07th August 2020 12:57 AM | Last Updated : 07th August 2020 12:57 AM | அ+அ அ- |

மத்தூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள ஈச்சங்காடு மேட்டுக்கொட்டாய் கிராமத்தை சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மனைவி சரண்யா (24). இவா், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை விவசாய நிலத்துக்கு சென்றாா். அங்கு விவசாயப் பணிகளை மேற்கொண்ட அவா்கள் மாலையில் வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் அட்டிகை, 4 பவுன் தங்கச் சங்கிலி , 6 பவுன் எடை கொண்ட 4 வளையல்கள், ஒரு பவுன் எடை கொண்ட 2 மோதிரங்கள், சிறிய சங்கிலிகள் என மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 24 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், கிருஷ்ணகிரியில் இருந்து கைரேகை நிபுணா்களை வரவழைத்து, மர பீரோ மற்றும் இரும்பு பீரோவில் பதிவான கைரேகைகளை சேகரித்தனா். இதுகுறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.