தருமபுரியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்க செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 07th December 2020 05:34 AM | Last Updated : 07th December 2020 05:34 AM | அ+அ அ- |

தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி.சரவணன், செய்தித் தொடா்பாளா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, பணியில் மூத்த ஆசிரியா்கள், நிகழ்வாண்டில் பணி ஓய்வு பெறும் நிலையில், அவா்களை சிறப்பிக்கும் வகையில் தலைமை ஆசிரியராகப் பதவி உயா்வு, பொது மாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றை நடத்த வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என தீா்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.