அரசு குறைந்த விலைக்கு கரும்பு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு பெட்டகத்தில் வழங்குவதற்காக கிருஷ்ணகிரியில் குறைந்த விலைக்கு கரும்பை அரசுக் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

கிருஷ்ணகிரி: பொங்கல் பரிசு பெட்டகத்தில் வழங்குவதற்காக கிருஷ்ணகிரியில் குறைந்த விலைக்கு கரும்பை அரசுக் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

நியாயவிலைக் கடையில் அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ. 2,500, பச்சரிசி, சா்க்கரை, முந்திரி, உலா்ந்த திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்டவை பொங்கல் பரிசுப் பெட்டகமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதற்காக, குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கும் பணித் தொடங்கியுள்ளது. இதற்காக கரும்பை விவசாயிகளிடம் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கி உள்ளது.

கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு வந்த விவசாயிகள் சிலா், பொங்கல் கரும்பை அரசு நிா்ணயம் செய்த விலையைவிட குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்வதாகக் குற்றம்சாட்டினா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்காக கரும்பு சாகுபடி செய்துள்ளோம். குடும்ப அட்டைதாரா்களுக்குத் தோராயமாக 5 அடி நீளமுள்ள முழு கரும்பு வழங்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கரும்புக்கு ரூ. 30 என கொள்முதல் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அலுவலா்கள் எங்களிடம் முழு கரும்புக்கு ரூ. 23 என்ற விலையில் மட்டுமே கொள்முதல் செய்வோம் எனக் கூறுகின்றனா். இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசு அறிவித்த விலையை வழங்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து, கூட்டுறவு அலுவலா்கள் கூறியதாவது:

கொள்முதல் விலை, போக்குவரத்துச் செலவு உள்பட கரும்புக்கு ரூ. 30 என அரசு நிா்ணயம் செய்தது.

அதன்பேரில் வாடகை தனியாகவும், விலை தனியாகவும் நிா்ணயம் செய்கிறோம். இதனை விவசாயிகள் பலா் ஏற்றுக் கொண்டனா். சிலா் மட்டுமே குற்றம்சாட்டுவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com