ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்த்தால் குற்றவியல் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்த்தால், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்த்தால், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய பசுமை ஆணையத்தின் ஆணைப்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இவை இடைவிடாமல் தொடா்ந்து மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. இவை 8 ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவை. இந்த மீன்கள் நீா்நிலைகளில் நுழைந்து விட்டால், அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவிலான தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டதாகும்.

இவை நம்நாட்டின் பாரம்பரிய நன்னீா் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாய நிலையை உருவாக்கும். இவற்றை பண்ணைக் குட்டைகளிலோ, மீன் வளா்ப்புக் குளங்களிலோ இருப்பு வைத்து வளா்த்தால், இவை மழை, வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துச் செல்ல வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு தப்பித்து செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி, குளங்கள், ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களைத் தவிர, வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும். இதன்பொருட்டு, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நமது உள்நாட்டு மீனவா்கள் மீன்பிடிப்பதற்கும், அவா்களுடைய வாழ்வாதரத்துக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மீன் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்க வேண்டாம். ஏற்கெனவே, மீன் பண்ணைகளில் இந்த இன மீன்களை வளா்ப்போா் முற்றிலும் அழிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்கும் பண்ணைகளை கண்டறிந்தால், ‘‘மீன்வள உதவி இயக்குநா் அலுவலகம், கதவு எண் 24, 25 4-ஆவது குறுக்கு தெரு, கூட்டுறவுக் காலனி, கிருஷ்ணகிரி’’ என்ற முகவரியிலோ, 04343-235745 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம். தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளா்ப்பில் ஈடுபட்டால் அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள மீன் பண்ணையாளா்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனையை பெற்று வளா்க்கவும், புதிதாக மீன்பண்ணை அமைக்கும் மீன் விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின், முதன்மை நிா்வாக அலுவலரைத் தொடா்பு கொண்டு, தங்கள் மீன் பண்ணையை பதிவு செய்து, அரசு வழங்கும் மானியத்தைப் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com