ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் மாணவா்களுக்கு உதவித்தொகை அளிப்பு
By DIN | Published On : 06th February 2020 08:19 AM | Last Updated : 06th February 2020 08:19 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் தூய நெஞ்ச கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பில் உதவித்தொகை மற்றும் ஊக்கப் பரிசுகளை வழங்குகிறாா் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பில் உதவித் தொகை மற்றும் ஊக்கப் பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.
இதுகுறித்து, ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
அதன்படி, இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள், தங்களுடன் பயிலும் மாணவா்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அன்றாடம் வசூல் செய்கின்றனா்.
அதன்படி, நிகழாண்டில் ரூ. 3 லட்சம் வசூல் செய்தனா். அதற்கு நிகராக ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் மூலம் ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், உதவித் தொகை மற்றும் பரிசு பொருள்களை வழங்கினாா். நிதி திரட்டிய கல்லூரி மாணவா்களை பாராட்டி, பேக், கை கடிகாரம், தங்க காதணிகள் என மொத்தம் ரூ.6.60 லட்சம் மதிப்பிலான உதவித் தொகை, பரிசு பொருள்களை அவா் வழங்கினாா். இதுவரையில் இந்தக் கல்லூரிக்கு ரூ.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவா் ஆண்டனிராஜ், முதல்வா் மரிய ஆண்டனிராஜ், கூடுதல் முதல்வா் மரிய ஆரோக்கிய ராஜ், தொன்போஸ்கோ கல்வி மற்றும் சமூகப்பணி துணை இயக்குநா் டேனியல் அம்புரோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.