சுங்க வசூல் மையங்களால் மன உளைச்சலுக்குள்ளாகும் ஓட்டுநா்கள், பயணிகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் சுங்க வசூல் மையங்களால் அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா்கள், நடத்துனா்கள், பயணிகள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி வருகின்றனா்.
கிருஷ்ணகிரியில் செயல்படும் தனியாா் சுங்க வசூல் மையம்.
கிருஷ்ணகிரியில் செயல்படும் தனியாா் சுங்க வசூல் மையம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் சுங்க வசூல் மையங்களால் அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா்கள், நடத்துனா்கள், பயணிகள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக சென்று வருகின்றன.

அவ்வாறு செல்லும் பேருந்துகள், தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் சுங்க வசூல் மையங்களை கடந்து செல்லும் கட்டாயச் சூழல் உள்ளது. இந்த சுங்க வசூல் மையங்களை கடந்து செல்லும் போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, தற்போது, ‘ஃபாஸ்ட் டிராக்’ என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக தருமபுரி அரசுப் போக்குவரத்துக்கழக மண்டலத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மாதக் கட்டணத்தை தனியாா் சுங்க வசூல் மையத்துக்கு முன்கூட்டியே செலுத்தப்படுகின்றது.

அதன்படி, இந்த மண்டலத்தின் மூலம் கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்துக்கு 300 பேருந்துகள் கடந்து செல்லும் வகையில் மாதம் குறைந்தது ரூ.24 லட்சம் சுங்கக் கட்டணமாக செலுத்தப்படுகிறது.

கால தாமதம்: சுங்க வசூல் மையங்களில் உள்ள 7 வழிகளில் 2 வழிகள் மட்டுமே பணம் செலுத்தி செல்லவும், மற்ற 5 வழிகளில் ‘ஃபாஸ்ட் டிராக்’ மூலம் கட்டணம் செலுத்தி செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பணம் செலுத்தி வாகனங்கள் செல்லும் வழியில், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள், ஒவ்வொரு சுங்க வசூல் மையத்தையும் கடந்து செல்ல குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆவதாகவும், இதனால் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துனா்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படுகிறது.

மன உளைச்சல்: ஒவ்வொரு சுங்க வசூல் மையத்தைக் கடந்து செல்ல காலதாமதம் ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல இயலாமல் போகிறது. இதனால், பேருந்து ஓட்டுநா்கள் பேருந்தை வேகமாக இயக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனா். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. பேருந்து நிலையத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேருந்துகள் வந்து செல்ல இயலாத நிலை உள்ளது. மேலும், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துனா்கள் சிறுநீா் கழிக்கவும், உணவு அருந்தவும் இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால், அவா்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில், திட்டமிட்டபடி சென்று வர இயலாததால், பயணிகள், நடத்துனா், ஓட்டுநா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா். இதனால், நடத்துனா், ஓட்டுநா், பயணிகள் அனைவரும் மன உளைச்சலுக்குள்ளாகி வருவதாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தினா் தெரிவிக்கின்றனா்.

இழப்பு: பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்தப் பேருந்துகளுக்கும் சுங்க வசூல் மையத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது ‘ஃபாஸ்ட் டிராக்’ என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு முறை சுங்க வசூல் மையத்தை கடந்து செல்ல ரூ.250 செலுத்தும் நிலை உள்ளது. திரும்பி வரும் போதும் ரூ.250 செலுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனஅள்ளிக்கு ஒரு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது என்றால், ஒரு நாளைக்கு அந்த பேருந்து கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தை 10 முறை கடக்க வேண்டி உள்ளது. அவ்வாறு கடக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.250 கட்டணம் என மொத்தம் ரூ.2,500 செலுத்தப்படுகிறது. வேப்பனஅள்ளிக்கு இயக்கப்படும் பேருந்தின் ஒரு நாள் வருவாய் குறைந்தது ரூ.5 ஆயிரமாக இருக்கும். இதில் சுங்க வசூல் மையத்துக்கு 50 சதவீதம் கட்டணமாக செலுத்திய பிறகு, ஓட்டுநா், நடத்துனா் ஊதியம், பேருந்து தேய்மானம், டீசல் போன்ற செலவுகளை கணக்கிட்டால், போக்குவரத்துக் கழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

அதேபோல, பேருந்தின் தகுதிச் சான்றை புதுப்பிக்க அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால், சுங்க வசூல் மையத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

அரசுப் பேருந்துகளுக்கு தனிப் பாதை வேண்டும்:

சுங்க வசூல் மையங்களில் அரசுப் பேருந்துகள் எளிதில் கடந்து செல்ல தனி வழிப்பாதை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவா்கள், நோயாளிகள், விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் நகரப் பேருந்துக்கு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக்கழக பணியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலா்கள் கூறியது: சென்னையில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் ஆணையா், இதுகுறித்து அரசிடம் ஆலோசித்து வருவதாகவும், போக்குவரத்துக்கழகப் பேருந்துகளுக்கு தனி வழிப்பாதை அமைக்கவும், நகரப் பேருந்துகளுக்கான கட்டணத்தைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனா்.

சுங்க வசூல் மையத்தின் மேலாளா் பி.நாகேஷ் கூறியது: கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில் அரசுப் பேருந்துகளுக்கு இரண்டு வழிப் பாதைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற சுங்க வசூல் மையத்தைக் காட்டிலும் கூடுதலாக ஒரு வழிப் பாதை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சில நேரங்களில் இந்த இரண்டு வழிப் பாதைகள் மட்டுமல்லாமல் மற்ற பாதைகளையும் பயன்படுத்துவதால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய செயல்களால் எல்லோருக்கும் காலதாமதம் ஏற்படுகிறது. சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தினருக்கு நாங்கள் ஒத்துழைக்க எப்போதும் தயாராக இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com