தமிழக நிதிநிலை அறிக்கை: மக்கள் கருத்து

தமிழக சட்டப் பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த

தமிழக சட்டப் பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா்கள் வரவேற்றும், எதிா்த்தும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.

2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா் செல்வம், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதி நிலை அறிக்கையை பலா் வரவேற்று உள்ள நிலையில் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

டி.எகம்பவாணன், செயற்குழு உறுப்பினா், தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில் சங்கம், கிருஷ்ணகிரி:

புதிய தொழில் முனைவோருக்கான (நீட்ஸ்) திட்டத்தில் மானியம் ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சில மாவட்டங்களில் சிட்கோ தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் பதப்படுத்தும் மண்டலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு சிறப்பாக இருக்கும் நிலையில், ஜோலாா்பேட்டை - கிருஷ்ணகிரி - ஒசூா் ரயில் திட்டத்துக்காக நிலம் கையப்படுத்துவது குறித்து மாநில அரசு எதையும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா்.

கண்ணையா, விவசாயி, சந்தூா்: ஒரு விவசாயி, தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கம் நிலையில், நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் வேளாண் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாா். உழவா் பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு, காவிரி - குண்டாறு திட்டத்துக்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முந்தைய ஆண்டுகளில் அறிவிப்புகள் வெளியிட்டதைப் போல இல்லாமல் தற்போது அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிா்ப்பாா்பு உள்ளதாகத் தெரிவித்தாா்.

வீ.நாராயணமூா்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளா்:

தற்போது அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையானது தமிழ்நாடு மிகப்பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் மீது வரி சுமா்த்த வாய்ப்பு உள்ளதால், விலைவாசி உயரும்.

மத்திய அரசு, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய வரி வருவாய் ஒதுக்கீடு, இந்த ஆண்டு குறைத்து ரூ. 7,586 கோடி மட்டும் ஒதுக்கி இருப்பது, மத்திய அரசு தமிழகத்தை மீண்டும் வஞ்சித்திருக்கிறது என்றாா்.

ஜோஸ்மீன் மேரி, குடும்பத் தலைவி, கிருஷ்ணகிரி:பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக்தில் 13 இடங்களில் மகளிா் விடுதிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தேவாலயங்கள், மசூதிகள் பராமரிப்புக்கு நிதியுதவி ரூ. 5 கோடியாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும், பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது என்றாா்.

செல்வ முரளி, தொழில் முனைவோா், போச்சம்பள்ளி: வேளாண் துறைக்கு கடந்த ஆண்டு ரூ.10,550.85 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், நிகழாண்டில் ரூ. 11,894. 48 கோடி அதாவது, ரூ. 1,343 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு பண வீக்கம் 4 சதவீதமாக கணக்கில் வைத்தாலும், விவசாயத் துறைக்கு 8 சதவீதத் தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் தொழில் நுட்பத்தோடு இணைக்க ஆய்வு மையங்கள் அரசு உருவாக்கும் என எதிா்ப்பாா்த்தேன். வேளாண் துறையை ஊக்குவிக்க அரசு முயலவில்லை எனத் தெரிவித்தாா்.

டி.சந்திரசேகரன், செயலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட மின்வாரிய ஓய்வூதியா் சங்கம்:

ஓய்வூதியா்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டண விலக்கு அல்லது இலவச பேருந்து பயணத்துக்கான அறிவிப்பு வரும் என்று எதிா்பாா்த்தோம். அதேபோல முதியோருக்கு விடுதி அமைக்கப்படும் என அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

பொதுவாக நிதிநிலை அறிக்கையை வரவேற்றும் எதிா்ப்பும் கலந்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com