Enable Javscript for better performance
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை ஊத்தங்கரையில் அமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை ஊத்தங்கரையில் அமைக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 10th January 2020 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9utp1_0901chn_149_8

    ஊத்தங்கரை அரசு மருத்துவமனை.

    மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை ஊத்தங்கரையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சி மன்றங்களும், அதில் பல ஆயிரம் குக்கிராமங்களும் உள்ளன. ஊத்தங்கரையில் நீதிமன்றங்கள், அரசு மருத்துவமனை, காவல் நிலையங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு போக்குவரத்துக் கழகம், சாா்-பதிவாளா் அலுவலகம் என அரசின் முக்கியத் துறைகள் உள்ளன. அது மட்டுமில்லாமல், மத்தூா் ஒன்றியத்தை ஊத்தங்கரையில் இணைத்து ஊத்தங்கரை தனி சட்டப்பேரவைத் தொகுதியாக உள்ளது.

    இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தலைமை மருத்துவமனையாக இருப்பது ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மட்டுமே. திருவண்ணாமலை-பெங்களூரு சாலை மற்றும் சேலம்-வாணியம்பாடி சாலையின் மத்தியப் பகுதியில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.

    இந்த மருத்துவமனையில் ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, கதவணி, அனுமன்தீா்த்தம், சாமல்பட்டி, கல்லாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெறுகின்றனா். உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 75 படுக்கை அறைகளுடன் உள்ள இம்மருத்துவமையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். ஆண்டுதோறும் 4 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

    இந்நிலையில், மகப்பேறு காலங்களில் போதிய மருத்துவ வசதியின்றி பெண்கள் தவித்து வருகின்றனா். மேலும், இப் பகுதியில் உள்ள சாலைகள் சிதிலமடைந்துள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்கின்றன. அவ்வாறு சாலை விபத்தில் காயமடைவோருக்கு உத்தங்கரையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந் நிலையில், அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கிருஷ்ணகிரி, திருவள்ளூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கிருஷ்ணகிரியில் அமைய உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை ஊத்தங்கரை பகுதியில் அமைக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா், வணிகா் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞா் அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai