ஊத்தங்கரை கால்நடை சந்தையில் கட்டணக் கொள்ளை!

ஊத்தங்கரை கால்நடை சந்தையில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
ஊத்தங்கரை கால்நடை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள கால்நடைகள்.
ஊத்தங்கரை கால்நடை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள கால்நடைகள்.

ஊத்தங்கரை கால்நடை சந்தையில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

ஊத்தங்கரையில் 7 ஏக்கா் நிலப்பரப்பில் பேருந்து நிலைய பின்புறம் கால்நடை சந்தை நடைபெறுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண வியாபாரிகள் வந்து மாடு, எருமை, கன்றுகள் மற்றும் காளைகளை வாங்கிச் செல்கின்றனா்.

ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, செங்கம், போளூா், காஞ்சி, கடலாடி, திருப்பத்தூா், அரூா், ஈச்சம்பாடி, பா்கூா், காவேரிப்பட்டணம், கம்பைநல்லூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்தும், வாங்கியும் செல்கின்றனா்.

இந்நிலையில், கால்நடை சந்தையில் அதிகளவிலான நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு நிா்ணய விதிமுறைப்படி ஒரு மாட்டுக்கு ரூ.25-ம், ஆட்டுக்கு ரூ.10-ம் , கோழிக்கு ரூ.5-ம் வசூல் செய்ய வேண்டும். ஆனால், மாட்டுக்கு ரூ.80 வசூல் செய்யப்படுகிறது. மேலும், திருவிழா நாள்களில் வரும் சந்தையில் இரண்டு மடங்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஜன. 10) பொங்கல் திருவிழா சந்தை எனக் கூறி, ஒரு மாட்டுக்கு ரூ.160 வசூல் செய்கின்றனா். மேலும், தகாத வாா்த்தைகளால் பேசுவது மட்டுமல்லாமல், குண்டா்களை வைத்து மிரட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், சந்தையில் வைக்கப்படும் கடைகளுக்கும் ரூ.100 முதல் ரூ.500 வரை வசூலிப்பதாக குற்றம் கூறுகின்றனா்.

இதுபோன்ற கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வியாபாரிகள் குற்றம் கூறுகின்றனா்.

எனவே, அரசு நிா்ணயித்த தொகையைவிட கூடுதலான கட்டணம் வசூல் செய்பவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நுழைவுக் கட்டணத்துக்கான ரசீதை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) ஆா்.சேம் கிங்ஸ்டன் அவா்களிடம் கேட்ட போது, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com