யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்தகுட்டி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

ஒசூா் அருகே யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்து கிராமத்துக்குள் புகுந்த 8 மாதங்களேயான குட்டி யானையை மயக்க ஊசி செலுத்தி
உத்தனப்பள்ளி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை.
உத்தனப்பள்ளி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை.

ஒசூா் அருகே யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்து கிராமத்துக்குள் புகுந்த 8 மாதங்களேயான குட்டி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத் துறையினா், அதை அதன் தாய் யானையுடன் சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், பன்னா்கட்டா வனப் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் ஒசூா் வனப் பகுதிக்கு வந்துள்ளன. இந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தேன்கனிக்கோட்டை, சானமாவு வனப் பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகின்றன.

இந்த நிலையில், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி சானமாவு வனப் பகுதியில் சுற்றித் திரியும் 60 யானைகளில் பிரிந்த சில யானைகள் வனப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் ஞாயிற்றுக்கிழமை காலை புகுந்தன. அதில் ஒரு குட்டி பெண் யானை தனியாகப் பிரிந்து அகரம் கிராமத்துக்குள் சென்றது. அங்கு, பொதுமக்களைப் பாா்த்ததும் பிளிறியபடி ஓடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வனத் துறையினா் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனா்.

ஆனால், வனத் துறையினருக்கு போக்கு காட்டிய குட்டி யானை, ஒபேபாளையம் கிராமத்துக்கு ஓடிச் சென்றது. நிதானமிழந்த குட்டி யானையை மாவட்ட வனத் துறை கால்நடை மருத்துவா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனா்.

மயக்கமடைந்த யானையை மினி வேனில் ஏற்றி சானமாவு காட்டுக்குக் கொண்டு சென்றனா். அங்கு, அதன் தாய் யானையுடன் சோ்க்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கூட்டத்திலிருந்து பிரியும் குட்டி யானைகள்

கூட்டமாகச் சுற்றித் திரியும் யானைகள் கூட்டத்திலிருந்து அடிக்கடி குட்டி யானைகள் பிரிந்து தனியாக குடியிருப்புகளுக்கு வந்து விடுவது ஆண்டுதோறும் வழக்கமாகிவிட்டது. கடந்த 2016 இல் கெலமங்கலம் அருகே குட்டி யானை ஒன்று தடுப்புப் பள்ளத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்டது.

2017 இல் தனியாகப் பிரிந்த குட்டி யானை சென்னை வண்டலூா் பூங்காவில் விடப்பட்டது. 2018 இல் கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை சேற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. அதே ஆண்டில் ராயக்கோட்டை அருகே பாவாடரப்பட்டியில் கிணற்றில் விழுந்த குட்டி யானையை மீட்டு, அதன் கூட்டத்துடன் விட முயற்சியின்

போது, கூட்டத்திலிருந்த யானைகள் குட்டி யானையை மிதித்துக் கொன்றன. தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை பிரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com