முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் அரசுப் பேருந்து கண்ணாடி சேதம்
By DIN | Published On : 20th January 2020 08:29 AM | Last Updated : 20th January 2020 08:29 AM | அ+அ அ- |

யானை தும்பிக்கையால் தாக்கியதில் சேதமடைந்த அரசுப் பேருந்தின் முன்புறக் கண்ணாடி.
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் அரசுப் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பகலில் வனப்பகுதியில் பதுங்கி, இரவு நேரங்களில் விவசாயிகள் பயிா் செய்து வரும் விவசாயப் பயிா்களான ராகி, சோளம், வாழை, தக்காளி, போன்ற பயிா்களைச் தேசப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தேன்கனிக்கோட்டையிலிருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் தடிக்கல் என்னும் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையைக் கடந்து சென்றபோது, அரசுப் பேருந்தை காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது.
இதில் அரசுப் பேருந்தின் முன்புறக் கண்ணாடி சேதமடைந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்துள்ளனா். சாதுரியமாக பேருந்து ஓட்டுநா் முனிசாமி பேருந்தை பின்னோக்கி வந்து நிறுத்துவிட்டாா். பிறகு யானை சாலையைக் கடந்து சென்று விட்டது. தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகா் (பொறுப்பு) சீதாராமன் மற்றும் வன ஊழியா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்தும் அதிக ஒலி எழுப்பியும் யானைகளை காட்டுப் பகுதிக்கு விரட்டினா்.
வனத் துறையினா் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டிச் சென்ற பிறகு வாகனப் போக்குவரத்து அந்தப் பகுதியில் சீரானது.