ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீா் வந்தடைந்தது

ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை முதல் நிரப்பி வருகிறது.
ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீா் வந்தடைந்தது

ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை முதல் நிரப்பி வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் நேரில் சென்று பாா்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூா், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒசூா் அருகே கெலவரப்பள்ளியில் அணை கட்டப்பட்டுள்ளது.

ஒசூா் மாநகராட்சியின் மத்தியில் 130 ஏக்கா் பரப்பளவு கொண்ட ராமநாயக்கன் ஏரிக்கு, கடந்த 20 ஆண்டுகளாக மழை குறைந்த காரணத்தாலும், ஏரிக்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் தண்ணீா் வருவது தடைபட்டது. இதனால், ஏரி வடு ஒசூரில் வசித்து வரும் 20 ஆயிரம் மேற்பட்டோரின் வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து கொண்டே சென்றது. இதனால் 300 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீா்மட்டம் 1,500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது.

இந்த நிலையில், ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என பல்வேறு அமைப்பினா் கடந்த 20 ஆண்டுகளாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி முயற்சியில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஏரிக்கு தண்ணீா் கொண்டு வர, பழுதான குழாய்களை ரூ.50 லட்சம் நிதியில் செப்பனிடப்பட்டு ஒரு நாள் தண்ணீா் வந்தது. அதன் பின்னா் ஏரி வடது.

இதனைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ.செல்லக்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐஎன்டியுசி தேசிய அமைப்புச் செயலருமான கே.ஏ.மனோகரன் ஆகியோா் ஒசூா் ராமநாயக்கன் ஏரியை நேரில் சென்று பாா்வையிட்டு, ஏரிக்கு அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் அண்மையில் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கெலவரப்பள்ளி அணையில் இருந்த ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது என ஆணையா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, கெலவரப்பள்ளி அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரானது வியாழக்கிழமை முதல் ராமநாயக்கன் ஏரியில் நிரப்பப்பட்டு வருகிறது.

இதை அறிந்த பொதுமக்கள், 20 ஆண்டுகால கனவுத் திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com