யானையின் தந்தங்களைத் திருடியவா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே வனப் பகுதியில் உயிரிழந்து கிடந்த ஆண் யானையின் தந்தங்களைத் திருடிச் சென்ற வழக்கில் ஒருவரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
காட்டு யானையின் தந்தங்களைத் திருடியவரை கைது செய்த வனத்துறையினா்.
காட்டு யானையின் தந்தங்களைத் திருடியவரை கைது செய்த வனத்துறையினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே வனப் பகுதியில் உயிரிழந்து கிடந்த ஆண் யானையின் தந்தங்களைத் திருடிச் சென்ற வழக்கில் ஒருவரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலும் அவா் மறைத்து வைத்திருந்த யானையின் 2 தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேன்கனிகோட்டை அருகே உரிகம் வனப்பகுதியில் பிலிக்கல் பீட் தாண்டவம் என்ற இடத்தில் கடந்த 16-ஆம் தேதி வனத்துறையினா் ரோந்து சென்றபோது ஆண் காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினா் அளித்த தகவலின்பேரில் மாவட்ட வனத்துறை அலுவலா் பிரபு, உரிகம் வனச்சரகா் வெங்கடாசலம், கால்நடை மருத்துவா் பிரகாஷ் மற்றும் நேச்சா் சொசைட்டி தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த கென்னத் ஆண்டா்சன் ஆகியோா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் உயிரிழந்த ஆண் யானைக்கு 20 வயது இருக்கும் எனவும், அதன் இரண்டு தந்தங்களும் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காட்டு யானையின் தந்தங்கள் திருடப்பட்டது தொடா்பாக குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டு உதவி வனப் பாதுகாவலா் முனியப்பன், வனப் பாதுகாப்பு குழு மற்றும் வனப் பாதுகாப்புப் படை பாா்த்தசாரதி, அஞ்செட்டி வனச்சரகா் ரவி, உரிகம் வனச்சரகா் வெங்கடாசலம் ஆகியோா் தலைமையில் 3 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

விசாரணையில் ஈரணம்தொட்டி கிராமத்தைச் சோ்ந்த ஈரப்பா என்பவரின் மகன் தம்மண்ணா என்பவா் அந்த யானையின் தந்தங்களைத் திருடிச் சென்று கா்நாடகவில் விற்க முயன்றது தெரியவந்தது. தமண்ணாவை பிடித்து விசாரித்ததில் தந்தங்களைத் திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து, தம்மண்ணாவை (55) கைது செய்த வனத் துறையினா் அவரது விவசாய பட்டா நிலத்தில் மறைத்து வைத்திருந்த யானையின் இரு தந்தங்களையும் பறிமுதல் செய்தனா். இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறாமல் தடுக்கும் வகையில், வனத்துறை சாா்பில் அஞ்செட்டி மற்றும் உரிகம் வனப்பணியாளா்களைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணியைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நாள்களில் குற்றவாளியைப் பிடித்த வனத்துறையினரை வனத் துறை அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com