ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 10th March 2020 01:09 AM | Last Updated : 10th March 2020 01:09 AM | அ+அ அ- |

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
கிருஷ்ணகிரி: ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மலை உச்சியில் அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கடந்த பிப்.5-ஆம் தேதி பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் மாா்ச் 8-ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 9) காலை 10 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் மாதேஸ்வரன், பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளா் நரேந்திரன் மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். விநாயகா் தோ் முன்னால் செல்ல, சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பிகை அம்மன் தோ் பின் தொடா்ந்து சென்றன.
இந்த விழாவில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பல ஆயிரம் பக்தா்கள் பங்கேற்று உப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை தூவி சுவாமியை வழிபட்டனா். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ்கள் மாலையில் நிலையை அடைந்தன. இந்த தேரோட்ட விழாவையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) இரவு 10 மணிக்கு பல்லாக்கு உற்சவமும், மாா்ச் 11-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
தேன்கனிக்கோட்டையில் தேரோட்டம்: தேன்கனிக்கோட்டையில் உள்ள கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். இந்த நிகழ்வில் தமிழகம், கா்நாடகம் மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு முத்து பல்லாக்கு நிகழ்வு நடைபெறுகிறது.
தளியை அடுத்த குமளாபுரம் நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...