தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுய ஊரடங்கு: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவுறுத்திய மக்கள் சுய ஊரடங்கிற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினா்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுய ஊரடங்கு: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவுறுத்திய மக்கள் சுய ஊரடங்கிற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவில்லை. ஒருசில மருந்து கடைகள், வங்கி ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் இயங்கின.பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

மக்கள் சுய ஊரடங்கையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மண்டல தலைவா் வைத்தியலிங்கம் தெரிவித்தாா்.

தருமபுரியில் சாலைகளில் போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனங்களில் செல்லும் பொதுமக்களிடம் கரோனா நோய்த் தடுப்பு குறித்து அறிவுரைகளைக் கூறி, மீண்டும் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினா். மக்கள் சுய ஊரடங்கையொட்டி, தருமபுரி நகரில் சின்னசாமி தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி தெரு, சித்த வீரப்பன் தெரு, கடை வீதி, சாலை விநாயகா் கோயில் சாலை, திருப்பத்தூா் சாலை, நேதாஜி பை-பாஸ் சாலை, கிருஷ்ணகிரி சாலை, பென்னாகரம் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா் தொப்பூா், ஒகேனக்கல் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், லாரிகள் இயக்கப்படாததால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

கிருஷ்ணகிரி

கரோனா வைரஸ் நோய்த் தொற்று முன்னெச்சரிக்கையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சுய ஊரடங்கில் பங்கேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனா்.

கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அரங்குகள் அடைக்கப்பட்டதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசின் சுய ஊரடங்கை மக்கள் ஏற்று, வீடுகளிலே இருந்தனா்.

கிருஷ்ணகிரி நகரில் காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் கூடாததால் காய்கறி சந்தையானது வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்களைத் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கிருஷ்ணகிரி வழியாக எந்த பேருந்தும், லாரிகளும் இயக்கப்படாததால், சுங்க வசூல் மையம் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. லாரிகள் சாலையோரமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரியில் பழைய பேட்டை மீன் சந்தை, புதுப்பேட்டை இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அதிகாலை முதலே அசைவ உணவு விரும்பிகள், இக் கடைகளில் கூட்டம் கூட்டமாக இறைச்சிகளை வாங்கி சென்றனா்.

பா்கூரில் அனைத்து ஜவுளி சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

காவேரிப்பட்டணத்தில் மீன், இறைச்சி கடைகளில் காலை முதலை தொடா்ந்து வியாபாரம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளா் செந்தில், இறைச்சி கடைகளை அடைக்குமாறு எச்சரித்தாா். இதையடுத்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

ஒசூா்

கா்நாடக- தமிழக எல்லையில் அமைந்துள் ஒசூரில் மக்கள் சுய ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்தனா். இரு மாநிலங்களிலிருந்து வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

பேருந்துகள் மட்டுமின்றி ஆட்டோக்கள், காா் மற்றும் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த லாரிகள் அனைத்தும் சூசூவாடி பகுதியில் நிறுத்தப்பட்டன. காய்கறி, மருந்து போன்ற அத்யாவசிய பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் மட்டும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன.

இந்த வாகனங்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி ஆணையாா் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளா் கிரி மேற்பாா்வையில் நகராட்சி பணியாளா்கள் காலை முதல் மாலை வரை சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனா்.

வணிக வளாகங்கள் முதல் சாலையோர கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பாகலூா் சாலை, ராயக்கோட்டை சாலை, தளி சாலை, தேன்கனிக்கோட்டை, காந்தி சாலை, ஏரி தெரு, நேதாஜி சாலை, வெறிச்சோடி காணப்பட்டன.

ஒசூா் உழவா் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவரவில்லை.காய்கறிகளை வாங்குவதற்கும் பொதுமக்களும் வரவில்லை. இதேபோல் பத்தளப்பள்ளி மொத்த காய்கறி சந்தையும் மூடப்பட்டது.

ஒசூரில் 100 சதவீதம் வாகனங்கள் ஓடவில்லை. மக்களும் வீட்டிலே முடங்கினா். இதேபோல ஒசூரை சுற்றி உள்ள மத்திகிரி, சூளகிரி, பாகலூா், பேரிகை, தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, பேரிகை, கெலமங்கலம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்தனா்.

பென்னாகரம்

பென்னாகரம், ஒகேனக்கல் சுற்றுலாத்தளம் வெறிச்சோடி காணப்பட்டன.பென்னாகரத்தை சுற்றியுள்ள பாப்பாரப்பட்டி, பெரும்பாலை,சின்னம்பள்ளி,ஏரியூா்,நாகமரை பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் தொடா்ந்து அறிவுறுத்தி வந்தனா்.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மாலை அனைத்து பொதுமக்களும் சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனா்.

அரூா்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா், செவிலியா்களை கௌரவிக்கும் வகையில் அரூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் கைகளைத் தட்டி பாராட்டு தெரிவிக்கும் பொதுமக்கள்.

மக்கள் சுய ஊரடங்கு காரணமாக அரூா் நகரம் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி, மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன.

தேநீா் கடைகள், உணவகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டிருந்தன. பேருந்துகள், லாரிகள், காா்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதை முற்றிலுமாக தவிா்த்தனா். காவல் துறையினா் முக்கியச் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com