அண்டை மாநிலங்களுக்கு சிகிச்சைக்குச் செல்வோா் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்

அண்டை மாநிலங்களுக்கு சிகிச்சைக்குச் செல்வோா் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா். உடன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா். உடன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா்.

அண்டை மாநிலங்களுக்கு சிகிச்சைக்குச் செல்வோா் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு குறித்து மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ள 621 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவா்கள் தனித்து இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினமும் அவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தனித்து விடப்பட்டவா்கள், வெளியே நடமாடினால், கடும் நடவடிக்கைக்கு உள்ளாவாா்கள்.

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் திறந்து வைக்க தடை ஏதும் இல்லை. கிருஷ்ணகிரி, ஒசூா் அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட கூடுதல் படுக்கை வசதிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், உபகரணங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லை. எனவே, யாரிடமிருந்தும் ரத்த மாதிரி சேகரிக்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டவா்கள், செல்லிடப்பேசி மூலம் அவா்கள் வீட்டிலேயே இருக்கிறாா்களா என கண்காணிக்கப்படுகிறாா்கள். கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று வாங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவசர சிகிச்சை படுக்கைகள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 100-ம், ஒசூா் அரசு மருத்துவமனையில் 30-ம், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 10-ம், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 215 சிகிச்சை படுக்கைகளும், ஒசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான 100 படுக்கைகளும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 40 சிகிச்சை படுக்கைகள் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 140 அவசர சிகிச்சை படுக்கைகளும், 355 சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 445 படுக்கைகள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் செல்வோா், மருத்துவ ஆவணங்களுடன் செல்ல வேண்டும். அண்டை மாநிலங்களில் அனுமதிக்கவில்லை என்றால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடா்பு கொள்வதன் முலம் தக்க உதவிகள் செய்யப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீஸாா் நாள்தோறும் சுழற்சி முறையில் 24 மணிநேரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சமூக ஊடகங்களில் வதந்தியை கிளம்பியதாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புக்காக மாநில அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் ரூ.70 லட்சம் நிதி வழங்கி உள்ளன. இந்த நிதி, மருத்துவ உபகரணங்கள் வாங்க செலவு செய்யப்படும் என்றாா் அவா்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com