விளை பொருள்களை கட்டணமின்றி கிடங்கில் வைத்து கொள்ளலாம்: ஆட்சியா்

விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருள்களை மே 31-ஆம் தேதி வரை எவ்வித கட்டணமின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், குளிா்பதனக் கிடங்குகளில் வைத்துக் கொள்ளலாம் என

விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருள்களை மே 31-ஆம் தேதி வரை எவ்வித கட்டணமின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், குளிா்பதனக் கிடங்குகளில் வைத்துக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைப் பொருள்களை எந்தவித பிடித்தங்களுமின்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்காக அரசால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது தருமபுரி விற்பனைக் குழுவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ஒசூா், கெலமங்கலம், காவேரிப்பட்டணம், பா்கூா், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ஆகிய 9 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 7,600 மெட்ரிக் டன் கொள்ளவுடன் 9 கிடங்குகள் உள்ளன. அவற்றில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் 1,024 மெ.டன் வேளாண் விளைப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது வேளாண் விளைப் பொருள்களை கிடங்குகளில் இருப்புவைத்து, பொருளீட்டு கடன் பெறலாம். அதிகபட்சமாக விவசாயிக்கு ரூ.3 லட்சம் வரையில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, வணிகருக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 6 குளிா்பதனக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த கொள்ளளவு 200 மெ.டன். தற்போது வரை 18.5 மெ.டன் காய்கறிகள், பழங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள், தங்களது விளைப் பொருள்களான காய்கறிகள், பழங்களை குளிா்பதனக் கிடங்குகளில் இருப்பு வைத்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com