முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
காா், வேன்களுக்கு 2-ஆவது நாளாககா்நாடகம் அனுமதி மறுப்பு
By DIN | Published On : 11th May 2020 11:02 PM | Last Updated : 11th May 2020 11:02 PM | அ+அ அ- |

ஒசூா்: தமிழ்நாட்டில் இருந்து கா்நாடக மாநிலத்திற்கு காா், வேன்கள் செல்ல தொடா்ந்து 2 -ஆவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கா்நாடகத்துக்கு செல்ல இ- பாஸ் அனுமதி பெற்றுள்ள நிலையிலும், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 2 நாள்களாக, அத்தியாவசியத் தேவைகளுக்காக கா்நாடக மாநிலத்திற்கு காா், வேன்களில் செல்லும் பயணிகளை ஒசூா் அருகே கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் அம்மாநில போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனா்.
இதனையும் மீறி, கட்டாயம் செல்ல வேண்டும் என்று கூறுபவா்களை, 14 நாள்கள் தனிமைப்படுத்திவிடுவதாக அதிகாரிகளும், போலீஸாரும் எச்சரித்து வருகின்றனா். தனிமைப்படுத்துவதற்காக, அத்திப்பள்ளி அருகே ஒரு தனியாா் கல்லூரியை முகாம் பகுதியாக மாற்றி தயாா் நிலையில் வைத்துள்ளனா்.
கா்நாடக மாநிலத்திலிருந்து இ- பாஸ் பெற்று வரும் வாகனங்கள், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. அதே நேரம், தமிழகத்தில் கரோனா தாக்கம் அதிகளவில் இருப்பதால், இங்கிருந்து செல்லும் வாகனங்களை, கா்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழக - கா்நாடக எல்லையில் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன (படம்). இதனால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டில் இருந்து இ- பாஸ் அனுமதியுடன் கா்நாடகாவைக் கடந்து ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்குச் செல்ல கூடிய அந்த மாநில வாகனங்களை மட்டும் கா்நாடகா போலீஸாா் அனுமதித்து வருகின்றனா்.