முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
துவரை மகசூலை அதிகரிக்க மானிய விலையில் நாற்று
By DIN | Published On : 11th May 2020 11:01 PM | Last Updated : 11th May 2020 11:01 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: ஒசூா் வட்டாரத்தில் மானாவாரி துவரையில் மகசூலை அதிகரிக்க குழித் தடுப்பு விதைப்பு நடவு செய்யும் வகையில் வேளாண்மைத் துறையின் சாா்பில் நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநா் மனோகரன், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒசூா் வட்டாரத்தில் துவரை உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடி அதிகரிக்க வேளாண்மை துறை சாா்பில் பூதிநத்தம், சூதாளம், முகளூா், ஆவலப்பள்ளி, பஞ்சாடசிபுரம், கோளதாசபுரம், பலவனப்பள்ளி, சூடுகொண்டப்பள்ளி, நந்திமங்கலம் மற்றும் புதுகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் சுமாா் 1,100 ஏக்கா் பரப்பளவில் மானாவாரி துவரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. துவரை மகசூலை பெருக்கவும், சாகுபடி செலவை குறைத்து அதிக வருவாய் ஈட்டவும், சுய தேவையை நிறைவு செய்து கொள்ளவும், வேளாண்மைத் துறை மூலம் துவரையில் பிஆா்ஜி - 1, பிஆா்ஜி - 2, பிஆா்ஜி - 5, சிஓ - 8 ஆகிய ரகங்கள், தற்போது விதைப்பு செய்ய ஏற்ற ரகங்களாக சிபாரிசு செய்யப்பட்டு வருகிறது.
இந்த விதைகளை தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் தற்போது, விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரகங்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு பிஆா்ஜி-1 மற்றும் பிஆா்ஜி-2 ரகங்களை நாற்றுகாளாக குழித் தட்டு முறையில் விதைப்பு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரக துவரை சாகுபடியை அனைத்து விதமான பயிா்களின் வரப்பு ஓரங்களில் 3 அடி இடைவெளி விட்டு வரப்பு பயிராகச் சாகுபடி செய்யலாம். இவை 150 செ.மீ. முதல் 200 செ.மீ. உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. 5 மாதங்களில் பூ பூக்கும். 1 செடியில் 3 கிலோ காய்களை அறுவடை செய்ய இயலும்.
மேலும், மகசூல் அதிகரிக்க துவரை சாகுபடி செய்த 45-ஆவது நாளில் செடியின் நுனியை கிள்ளிவிடுவதன் மூலமாக அதிக பக்க கிளைகள் தோன்றி, அதிக பூக்கள் உருவாகி, மகசூல் அதிகரிக்கும். (பச்சை காயாகவும், பருப்பாகவும் பயன்படுத்தலாம்). மேலும், 2 சதவீத டிஏபி கரைசலை இலை வழி மூலமாக தெளிப்பதால் அதிக மகசூல் பெறலாம்.
எனவே, குழித் தட்டு துவரை நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா் ரேணுகாவை 8890176988, துணை வேளாண்மை அலுவலா் முருகேசனை 9443664590 ஆகியோரைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.