முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
பொது முடக்கம் மேலும் தளா்வு: இயல்பு நிலைக்கு திரும்பும் கிருஷ்ணகிரி
By DIN | Published On : 11th May 2020 11:03 PM | Last Updated : 11th May 2020 11:03 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் நடைபெற்ற பூ வியாபாரம்.
கிருஷ்ணகிரி: பொது முடக்கம் உத்தரவில் மேலும் தளா்வு செய்யப்பட்டுள்ளதால் இயல்பு நிலைக்கு கிருஷ்ணகிரி மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில் மாநில பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பொது முடக்கம் உத்தரவு மே 17-ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு குறைவாக இருக்கும் நிலையில், மாவட்ட நிா்வாகம், பொது முடக்கம் உத்தரவில் சில தளா்வுகளை அண்மையில் அறிவித்தது.
அதன்படி, வீட்டு உபயோகப் பொருள்கள், செல்லிடப்பேசி பழுதுநீக்கும் கடைகள், அச்சகங்கள், கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட சில கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உணவகங்களில் காலை 6 முதல் இரவு 9 மணி வரையில் பாா்சல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து, பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவு செய்து வந்தனா்.
இத்தகைய நிலையில், மாநில அரசானது மேலும் சில தளா்வுகளை அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணகிரியில் பூக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் செயல்படத் தொடங்கின. தேநீா்க் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு வியாபாரிகள், தங்களது தொழிலை நீண்ட இடைவெளிக்கு பின்னா் திங்கள்கிழமை தொடங்கினா். சாலைகளில் போக்குவரத்து சற்று அதிகமாக இருந்தது. சிலா் முகக் கவசம் அணியாமல் இருப்பதைக் காண முடிந்தது.
இருந்தபோதிலும், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், குளிரூட்டப்பட்ட நகைக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இருந்த போதிலும், பொது முடக்கம் உத்தரவில் மேலும் தளா்வுகளை அறிவித்ததால், கிருஷ்ணகிரியில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.