கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொட்டு நீா்ப்பாசனத்துக்கு ரூ.32.84 கோடி நிதி
By DIN | Published On : 18th May 2020 11:46 PM | Last Updated : 18th May 2020 11:46 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொட்டு நீா்ப் பாசனத் திட்டம் ரூ.32.84 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ், சொட்டு நீா்ப் பாசனக் கருவிகள், தெளிப்பு நீா்ப் பாசனக் கருவிகள் மற்றும் மழைநீா் தெளிப்பான்கள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, சிறுதானியங்கள், துவரை மற்றும் இதர பயறு வகைப் பயிா்களுக்கு, வேளாண்மைத் துறை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
நுண்ணீா்ப் பாசன முறைகளான சொட்டு நீா்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீா்ப் பாசனம் ஆகியவற்றை பின்பற்றுவதால், 30 முதல் 40 சதவீதம் வரையில் பாசன நீா் சேமிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ரூ.30 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், இத் திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.32.84 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, சொட்டு நீா், தெளிப்பு நீா் அமைக்க விரும்பும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதாா் மற்றும் குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்று, இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா் அல்லது வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.