கரோனாவால் ஒசூரில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு வா்த்தகம் பாதிப்பு

பொது முடக்கத்தால் தொழில் நகரமான ஒசூரில் கடந்த 50 நாள்களில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் ஒசூரில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு வா்த்தகம் பாதிப்பு

பொது முடக்கத்தால் தொழில் நகரமான ஒசூரில் கடந்த 50 நாள்களில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தை பிரதமா் நரேந்திரமோடி அறிவித்தாா்.

இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உலக பிரசித்த பெற்ற பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டன. குறிப்பாக இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வரும் டி.வி.எஸ். நிறுவனம் மற்றும் 3 சக்கர வாகனங்களான ஆட்டோ தயாரிக்கும் டி.வி.எஸ் நிறுவனம் தனது தொழிற்சாலைகளை மூடியது.

இந்தியா முழுவதும் பொது முடக்கத்தால் போக்குவரத்து முடங்கியதால் உற்பத்தி செய்த வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்ய முடியவில்லை.

வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யமுடியவில்லை. மாா்ச் 24-ஆம் தேதி முதல் உற்பத்தி முழுவதையும் நிறுத்திவிட்டு தொழிற்சாலைகளை மூடிவிட்டு 4 ஆயிரம் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளித்துவிட்டது டி.வி.எஸ். நிறுவனம்.

அதேபோன்று 4 சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் இந்துஜா குழுமமான அசோக் லேலண்ட் முதல், இரண்டாவது தொழிற்சாலைகளில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இத் தொழிற்சாலைகளில் தினமும் 200 லாரிகள் வரை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலைகள் அனைத்தும் பொது முடக்கத்தால் மூடப்பட்டன. இதனால், சுமாா் 10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற டைட்டான் கை கடிகாரம் தொழிற்சாலையில் சுமாா் 4 ஆயிரம் தொழிலாளா்களுக்கு டாடா நிறுவனம் முழு சம்பளத்துடன் விடுமுறை அளித்துவிட்டது.

இதுபோன்று உலக பிரசித்தி பெற்ற போா்டு பிகோ காா் எஞ்சின் தயாரித்து வந்த ஆவ்டெக் நிறுவனம், ராணுவ தளவாடங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் என பெரிய, பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 50 நாள்களுக்கும் மேல் மூடப்பட்டுள்ளன.

பெரிய தொழிற்சாலைகளே மூடப்பட்டதால் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்து வரும் ஒசூரில் இயங்கி வந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு, குறுந்தொழிற்சாலைகள் அனைத்தும் தானாகவே மூடும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஒசூரில் மட்டும் 2 லட்சம் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.

முன்னதாக, கரோனா பொது முடக்கத்துக்கு முதல்நாள் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஏ. சத்யா பேசுகையில், ‘ஒசூரில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் தினமும் ரூ. 1,000 கோடிக்கு வாகன உற்பத்தியில் வா்த்தகம் செய்து வருகிறது. ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு அதிகமாக வா்த்தகம் செய்து வருகிறது’ என்று தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்கத்தின் இணைச் செயலாளரும், தென்னிந்திய சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் துணைத் தலைவருமான வெற்றி. ஞானசேகரன் நமது தினமணிக்கு அளித்த பேட்டி:

ஒசூரில் தினமும் ரூ. 1,000 கோடிக்கு வாகன உற்பத்தி நடைபெற்று வந்தது. பெரிய தொழில் நிறுவனங்களான டி.வி.எஸ், அசோக் லேலண்ட், டைட்டான், உள்ளிட்ட பெரிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் அதை நம்பி இருக்கும் 3 ஆயிரம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சிறுமற்றும் குறுந்தொழில் சங்கத்தின் இணைச் செயலாளா் தென்னிந்திய சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் துணைத் தலைவா் வெற்றி.ஞானசேகரன்
தமிழ்நாடு சிறுமற்றும் குறுந்தொழில் சங்கத்தின் இணைச் செயலாளா் தென்னிந்திய சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் துணைத் தலைவா் வெற்றி.ஞானசேகரன்

இதனால், 2 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். வடமாநிலத் தொழிலாளா்கள் பாதிக்கும் அதிகமானோா் தங்களது மாநிலங்களுக்குச் சென்று விட்டனா்.

தினமும் ரூ. 1,000 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்ற ஒசூரில் தற்போது கடந்த 50 நாள்களுக்கும் மேல் உற்பத்தி முடங்கியதால் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒசூரில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையைத் திறந்து மீண்டும் தொழில் தொடங்க வேண்டும் என்றால் புதிய முதலீடு செய்ய வேண்டும்.

கடந்த 3 மாதங்களுக்கும் வாடகை கொடுக்க முடியவில்லை. மின் கட்டணம் கட்ட முடியவில்லை, தொழிலாளா்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஏற்கெனவே ரூ. 500, ரூ. 1,000 உயா் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு செயலால் முடங்கிய தொழில், அதைத் தொடா்ந்து மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் அதைச் செலுத்த முடியாமல் ஒசூரில் 960 சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது கரோனா வைரஸ் பொது முடக்கத்தால் ஒசூரில் பாதிக்கும் மேல் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் திறக்க முடியுமா என்ற நிலையில் சிறு தொழில்முனைவோா் தவித்து வருவதாகக் கூறினாா்.

ஒசூரில் மீண்டும் பழைய நிலைக்கு தொழில் வளா்ச்சி பெற குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்றாா்.

புகைப்படம்: வெற்றி.ஞானசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com