50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் விலக்களிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் ப.கோபி, தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், மாவட்டக் கல்வி அலுவலா் கலாவதி ஆகியோரை தனித்தனியே சந்தித்து, மேல்நிலைத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணி சாா்ந்த கோரிக்கை மனுவை நிா்வாகிகள் வியாழக்கிழமை அளித்தனா்.

அந்த மனு விவரம்: நடைபெற உள்ள மேல்நிலைத் தோ்வு மதிப்பீட்டு பணியில் முதுநிலை ஆசிரியா்களின் நலன் கருதி,

கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய மையங்களில் அமைக்கப்படும் மதிப்பீட்டு பணி முகாம்களோடு, கூடுதலாக தேன்கனிக்கோட்டை, மத்தூா் ஆகிய இடங்களில் தோ்வுத்தாள் திருத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும். தோ்வு மையத்துக்கு வரும் வகையில் ஆசிரியா்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பிற மாவட்டங்களில் வசிக்கும் முதுநிலை ஆசிரியா்கள், சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் விடைத் தாள் திருத்தும் பணிக்கு அனுமதிக்க வேண்டும்.

விடைத்தாள் திருத்தும் பணியில் உடல் நலம் குன்றியோா், கா்ப்பிணிகள், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு விலக்கு அளிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு தினமும் முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை வழங்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தை தினமும் இரண்டு முறை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, அந்தக் கழகத்தின் மாவட்டச் செயலா் காா்த்திக், பொருளாளா் அன்பழகன், செயலா்கள் சத்தியமூா்த்தி, முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com