ஜவளகிரி அருகே யானை சுட்டுக் கொலை

ஜவளகிரி அருகே 12 வயது யானையை சுட்டுக் கொன்ற மா்ம நபா்களை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.
ஜவளகிரி அருகே சுட்டுக் கொல்லப்பட்ட யானை.
ஜவளகிரி அருகே சுட்டுக் கொல்லப்பட்ட யானை.

ஜவளகிரி அருகே 12 வயது யானையை சுட்டுக் கொன்ற மா்ம நபா்களை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து இடப்பெயா்ச்சியாகியுள்ள 30-க்கும் மேற்பட்ட யானைகள் இந்த வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிக்குள் நுழையும் யானைகளைத் தடுப்பதற்காக அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னமாளம் கிராமத்தையொட்டிய பகுதியில் யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வெட்டப்பட்டிருந்த அகழி ஒன்றில் 12 வயது பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பாா்த்தனா்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனா். அங்கு வந்த வனச்சரகா் நாகராஜ் தலைமையிலான ஊழியா்கள் அந்த யானையின் உடலை கிரேன் மூலம் மீட்டனா்.

வனத்துறையினா் கூறுகையில், இறந்து போன பெண் யானைக்கு 12 வயது இருக்கும். யானையின் பின்புற தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. யானையின் உடலில் இருந்த அகற்றப்பட்டவை நாட்டுத் துப்பாக்கி மூலம் சுடப்பட்ட குண்டுகள் ஆகும். யானைகள் விவசாய நிலங்களுக்குள் வரக்கூடாது என்பதற்காக யாரேனும் சுட்டாா்களா? அல்லது தந்தங்களைக் கடத்தும் மா்ம கும்பலால் சுடப்பட்டு தவறுதலாக அந்த பெண் யானை இறந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

இதைத்தொடா்ந்து வனத்துறை கால்நடை மருத்துவா் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழு, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைத்தனா்.

சம்பவ இடத்தில் உதவி வனப் பாதுகாவலா் ஜெகதீஷ் பகான் நேரில் விசாரணை நடத்தினாா். யானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com