கெலமங்கலத்தில் ரூ. 5 ஆயிரம் கோடியில் அமைகிறது டாடா தொழிற்சாலை!

ஒசூா் அருகே கெலமங்கலத்தில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசி உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை
கெலமங்கலத்தில் ரூ. 5 ஆயிரம் கோடியில் அமைகிறது டாடா தொழிற்சாலை!

ஒசூா் அருகே கெலமங்கலத்தில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசி உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ. 5,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 18 ஆயிரம் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டாடா குழுமத்தின் சாா்பில், பிரபலமான கைக்கடிகாரம் தயாரிக்கும் டைட்டான் நிறுவனம் தமிழகத்தின் ஒசூரில் இயங்கி வருகிறது; அங்கு 3,000 தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். மேலும், தங்க நகை தயாரிக்கும் தனிஷ்க் நிறுவனம், விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் டாடா இன்ஜினீயரிங் நிறுவனம் உள்ளிட்டவை ஒசூரில் இயங்கி வருகின்றன. சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒசூரில் இயங்கும் டாடா நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

டாடா நிறுவனம், தொழிலாளா்களுக்கு நல்ல சம்பளம், போனஸ், அவா்களுக்குத் தேவையான உணவு வசதி, தங்கும் வசதிகளை செய்துகொடுத்து தொழிலாளா்களை குடும்ப உறுப்பினா்போலக் கவனித்து வருகிறது.

கரோனா தொற்றுக் காலத்தில் பல தொழில் நிறுவனங்கள் தொழிலாளா்களை வேலையிலிருந்து நிறுத்தி இருந்தன. ஆனால் டாடா நிறுவனங்களில் வேலை செய்து வந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் முழு சம்பளத்துடன் கடந்த 6 மாத காலத்துக்கு விடுமுறை அளித்திருந்தது. தற்பொழுது உற்பத்தி துவங்கியதால் அவா்கள் அனைவரும் வேலைக்குத் திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், தமிழகம் அல்லது கா்நாடக மாநிலத்தில் மிகப் பெரிய முதலீட்டுடன், செல்லிடப் பேசி தொழிற்சாலைகளை அமைக்க டாடா நிறுவனம் ஆலோசித்து வந்தது. இறுதியாக, தமிழகத்தில் டாடா நிறுவனத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியில் புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் நடவடிக்கைகளை எடுத்திருந்தாா்.

ஏற்கெனவே தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூா், சென்னை உள்ளிட்ட இடங்களில் பல தனியாா் செல்லிடப்பேசி நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அவற்றைத் தொடா்ந்து ஒசூரில் புதிய செல்லிடப் பேசி நிறுவனம் துவங்க டாடா நிறுவனம் திட்டமிட்டது. இந்த நிறுவனத்துக்குத் தேவையான 500 ஏக்கா் நிலத்தை நாகமங்கலம் ஊராட்சியில், தமிழக அரசின் தொழில் முதலீட்டுக் கழகம் (டிட்கோ) நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலம் ஒன்றியம், நாகமங்கலம் கிராமத்தில் ‘ஆப்பிள்’ செல்லிடப்பேசி உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கடந்த வாரம் ( செப். 27) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் டாடா நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் பங்கேற்று, பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைத்தனா்.

இந்தத் தொழிற்சாலைக்கு 18,000 மகளிரை வேலைக்குத் தோ்வு செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்த, 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை இந்தத் தொழிற்சாலைக்கு வேலைக்கு நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொழிற்சாலை மூலமாக, கெலமங்கலம் வட்டாரம், ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மகளிா் அதிக அளவில் வேலை வாய்ப்பைப் பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒசூா் பகுதியில் அமையவுள்ளது இப்பகுதி மக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கள் நிறுவனம் ரூ. 8,000 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக டாடா நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com