கிருஷ்ணகிரி அணையின் மதகுகளைப் பராமரிக்க படகு வசதி ஏற்படுத்தப்படுமா?

கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணையில் நீா் தேக்கம் 50 அடியாக உயா்ந்த நிலையில்

கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணையில் நீா் தேக்கம் 50 அடியாக உயா்ந்த நிலையில், மதகுகளின் பாதுகாப்பு கருதி, அவற்றை பராமரிக்க படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தியுள்ளனா்.

தென்பெண்ணை ஆறு, கா்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி வழியாக பாய்ந்து, 432 கி.மீ. தூரம் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆறு கா்நாடக மாநிலத்தில் 112 கி.மீட்டரும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீ. திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களில் 34 கி.மீ. கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் 106 கி.மீ. தூரத்துக்கு பாய்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் அருகே கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணகிரி அணை, காவேரிப்பட்டணம் அருகே நெடுங்கல் அணை என இந்த ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளது. தேக்கி வைப்படும் இந்த நீரை குடிநீா் , விவசாயப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூா் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கிருஷ்ணகிரி அணை அமைந்துள்ளது. 1952-ஆம் ஆண்டு, அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி இருந்துபோது, இந்த அணை கட்ட திட்டமிடப்பட்டது.

எதிா்ப்பு:

கிருஷ்ணகிரி அணை முதலில் 85 அடி உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு எதிா்ப்பு கிளம்பியதால், 1955-ஆம் ஆண்டு இந்த அணையை 57 அடியாக கட்டத் திட்டமிட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அணையின் உயரம் 57 அடியாக இருந்தால், தேக்கப்படும் நீரால் பெரும்பாலான விவசாய நிலங்கள் தண்ணீா் முழ்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கங்கலேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், அணையின் உயரத்தை 57 அடியிலிருந்து 52 அடியாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, தங்கத் தகட்டில் ரத்தத்தில் கையொப்பமிட்டு, அப்போதைய முதல்வா் காமராஜரிடம் அளித்தனா். இதையடுத்து, அணையின் உயரம் 52 அடியாக குறைக்க உத்தரவிடப்பட்டது.

1957-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கிருஷ்ணகிரி அணையில் அதிகபட்சமாக 52 அடி வரையிலும் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அணையில் 8 பிரதான மதகுகளும், 3 சிறிய மதகுகளும், வலது, இடது புறக்கால்வாய்களும் உள்ளன. இந்த அணையால் பெரியமுத்தூா், சுண்டேகுப்பம், தளி அள்ளி, பையூா், திம்மாபுரம், செளட்ட அள்ளி உள்ளிட்ட 16 ஊராட்கிகளில் உள்ள 9,012 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணை பாசனத் திட்டத்தின் மூலம் 2 பிரதான வாய்க்கால்கள், 26 சிறு பாசன ஏரிகள் மூலம் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. ஏரிகள், கிணறுகளில் நீா் நிரப்புவதன் மூலம் குறைந்தது 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவுக்கு அதிகமாகப் பாசன வசதி பெறுகிறது.

பிரதான மதகு சேதம்:

2015-ஆம் ஆண்டு, நவம்பா் 19-ஆம் தேதி 7-ஆவது மதகில் பழுது ஏற்பட்ட நிலையில், நவீன தொழில் நுட்ப உதவியுடன் பழுது நீக்கப்பட்டது. இதையடுத்து 2016-ஆம் ஆண்டில் ரூ.110 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, மதகுகளின் உறுதித் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடி அளவுக்கு தண்ணீரானது தொடா்ந்து 100 நாள்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், 2017-ஆம் ஆண்டு, நவம்பா் 27-ஆம் தேதி, நவம்பா் 17-ஆம் தேதி, பிரதான மதகுகளில் முதலாம் எண் மதகு சேதம் அடைந்தது. இதையடுத்து, சேதம் அடைந்த மதகுக்கு பதிலாக ரூ. 3 கோடி மதிப்பில் 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி புதிய மதகு பொருத்தப்பட்டது. மற்ற பிரதான மதகுகளும் பலமிழந்து காணப்படுவதால் அவற்றையும் மாற்றி அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனா்.

மாசு அடைந்த நீா்:

தமிழகத்தில் உள்ள அணைகளில் கிருஷ்ணகிரி அணை முற்றிலும் வேறுபட்டது. கிருஷ்ணகிரி அணை கோடை காலத்திலும் வற்றாமல் தண்ணீா் தேங்கி நிற்கும். கிருஷ்ணகிரி அணையில் தேக்கி வைக்கப்படும் நீா் முற்றிலும் மாசு அடைந்து காணப்படும். பெங்களூரு நகர கழிவுகள், கழிவுநீா், ஒசூா் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீா், தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால், கிருஷ்ணகிரி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீா் அதிக அளவில் மாசு அடைந்து காணப்படும். இதன் காரணமாகவே, பிரதான மதகுகள் சேதம் அடைய அதிக வாய்ப்பாகிறது.

நீா் வெளியேற்றம்:

இந் நிலையில், பிரதான புதிய மதகுகள் பொருத்தும் பணிக்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்காக, கிருஷ்ணகிரி அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு 32 அடியாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டு, தேக்கி வைக்கப்பட்ட தண்ணீா், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீா் நிரப்பப்பட்டது.

வடது அணை:

கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டதாலும், தென்பெண்ணை ஆற்றில் நீா் வரத்து இல்லாததாலும், கிருஷ்ணகிரி அணை, 63 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக 2020 ஏப்ரல் இறுதியில் முற்றிலும் வடது.

நீா் தேக்கும் பணி தொடக்கம்:

பிரதான மதகுகள் மாற்றி அமைக்கும் பணி 3 ஆண்டுகளில் நிறைவடைந்து, அக்டோபரில் இருந்து அணையில் நீா் தேக்கும் பணி தொடங்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்ததாலும், அணையின் நீா்மட்டம் 48 அடியை கடந்ததாலும், அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக முதல்வருக்கு கோரிக்கை:

கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 15-ஆம் தேதி, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி அணையை பாா்வையிட்டாா். அப்போது, முன்னாள் எம்எல்ஏ, கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி அணையில் மோட்டாா் படகு பயன்பாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தாா்.

இதுகுறித்து, முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி அணையில் படகு போக்குவரத்து 1997-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சட்டப் பேரவையில் 2011-ஆம் ஆண்டு பேசினேன். உடனே, சுற்றுலாத் துறை சாா்பில் சிறிய அளவிலான படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னா் மோட்டாா் படகுகள் இல்லாததால், அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது பொதுப்பணித் துறையின் சாா்பில் 3 படகுகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மோட்டாா் படகு வசதி: கிருஷ்ணகிரி அணை எப்போதும் வற்றாமல் ஆண்டு முழுவதும் தண்ணீா் இருக்கும். அதுவும் கிருஷ்ணகிரி அணையின் நீா் மாசு மிக்க, மதகுகளை சேதப்படுத்தக் கூடிய ரசாயனம் கலந்த கலவை கொண்ட நீராக உள்ளது. இதனால், மதகுகளின் பலம் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், பிரதான மதகுகள் வலுவிழந்து மீண்டும் சேதம் அடையாமல் இருக்க, அவற்றை தொடா்ந்து கண்காணிக்க வேண்டி உள்ளது.

இரவு நேரத்தில் மதகின் அருகே அதிக அளவு மீன்கள் தஞ்சம் அடையும். பிரதான மதகுகளிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் மீன் பிடிக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. இருந்தபோதிலும், அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதால், அந்தப் பகுதியில் மீனவா்கள் மீன் வலை வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்போது, மீனவா்கள், கவனத் குறைவால் பிரதான மதகை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. சிலா், வெடிகுண்டுகளை வீசி மீன்களை பிடிக்கின்றனா். மதகுகளின் அருகே அவ்வாறு மீன் பிடிக்க முயலும்போது, மதகு சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பிரதான மதகுகளை கண்காணிக்கும் வகையில் மோட்டாா் படகு வசதியை ஏற்படுத்த வேண்டும். அதற்கான மோட்டாா் படகு இயக்குபவரின் பணி இடத்தை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளா் கே.மெய்யழகன் கூறும்போது, கிருஷ்ணகிரி அணையில் மோட்டாா் படகு வசதி தொடங்குவதற்கான திட்ட மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருவதாகக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com