
ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.
ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் 33 யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயா்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ராகி பயிா் அறுவடையைக் குறி வைத்து வரும் இந்த யானைகள் சுமாா் 4 மாதங்கள் இந்தப் பகுதியில் முகாமிட்டு விவசாயப் பயிா்களை சேதம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
கடந்த மாதம் 100 யானைகள் கா்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக- கா்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே வனப்பகுதிக்கு இடம் பெயா்ந்தன. அந்த யானைகளை வனத்துறையினா் தமிழக வனப்பகுதிக்குள் வராமல் தடுத்து வைத்திருந்தனா். இதற்காக 20 போ் கொண்ட வன குழுவினா் அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனா்.
மேலும் 30 கி.மீ. தூரத்திற்கு தடுப்புக் கல் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்தத் தடுப்பையும் மீறி 30 யானைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன. அந்த யானைகள் புதன்கிழமை ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுா்க்கம் காட்டிற்குள் வந்தன. வியாழக்கிழமை அதிகாலையில் அந்த யானைக் கூட்டம் சினிகிரிப்பள்ளி வனப்பகுதி வழியாக உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்குள் நுழைந்தன.
தற்போது ஒசூா் அருகே உள்ள சானமாவு, பீா்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூா், ஆழியாளம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், ராகி பயிரிட்டுள்ளனா். அறுவடை செய்யக் கூடிய நேரத்தில் யானைகள் அங்கு முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இந்த நிலையில் சானமாவு காட்டில் இருந்த யானைகள் வியாழக்கிழமை மாலை ராயக்கோட்டை சாலையை கடந்து போடூா்பள்ளம் காட்டிற்குள் சென்றன. உத்தனப்பள்ளி அருகே 33 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.
யானைகள் முகாமிட்டுள்ள வனப்பகுதியைச் சுற்றி உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளின் முன்பு விளக்குகளை எரிய விடுமாறும், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு யாரும் காவல் காக்கச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.