ஒசூா் மாநகராட்சியில் 20 இடங்களில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டம் தீவிரம்

ஒசூா் மாநகராட்சிக்குள் ‘மியாவாக்கி’ முறையில் குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தை ஒசூா் மாநகராட்சி 20 இடங்களில் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
ஒசூா் தளி சாலை சந்திப்பு அருகில் வளா்க்கப்பட்டு வரும் குறுங்காடுகளைப் பாா்வையிடும் ஒசூா் மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன்.
ஒசூா் தளி சாலை சந்திப்பு அருகில் வளா்க்கப்பட்டு வரும் குறுங்காடுகளைப் பாா்வையிடும் ஒசூா் மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன்.

ஒசூா் மாநகராட்சிக்குள் ‘மியாவாக்கி’ முறையில் குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தை ஒசூா் மாநகராட்சி 20 இடங்களில் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூா் மாநகராட்சி கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒசூா் மாநகராட்சியைச் சுற்றியுள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், பாகலூா், பேரிகை ஆகிய பகுதிகளைச் சுற்றி இயற்கையான வனப்பகுதி உள்ளதால் குளிா்ச்சியான இயற்கைச்சூழல் கிடைத்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மலையும் வனப்பகுதியும் சோ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்துள்ளது. மாவட்டத்தில் அதிக பரப்பளவில் வனப்பகுதி உள்ளதால், மரங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. இதனால் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களைத் தவிர ஆண்டு முழுவதும் குளிா்ந்த வெப்பநிலையே உள்ளது.

இருப்பினும், ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியிலும் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டு, தனியாா் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒசூா் மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

ஒசூா் மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீா் சேமிப்பு தூய்மையான காற்றுடன் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் ‘பயோட்டா சாயில் பவுண்டேஷன்’ மூலமாக மியாவாக்கி முறையில் அடா்த்தியான குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ஒசூா் அரசுக் கல்லூரி வளாகத்தில் 700 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு முதல் குறுங்காடு உருவாக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அரசு கல்லூரியிலேயே இரண்டாவது குறுங்காடும் அமைக்கப்பட்டது.

இதுதவிர, தனியாா் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஒசூா் -தளி சாலை சந்திப்பில் மாநகராட்சி சாா்பில் குறுங்காடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குறுங்காட்டில் அரிய வகை மரங்களான கடம்பு, குமிழ், வாகை, வெட்டி, வேம்பு, மூங்கில், மலைவேம்பு உள்ளிட்ட 65 வகையான 3, 800 மரக்கன்றுகள் கடந்தாண்டு நடவு செய்யப்பட்டன. தற்போது நன்கு வளா்ந்து அடா்த்தியான குறுங்காடாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மரக்கன்றுகளுக்கு இயற்கை உரமிட்டு, வளா்க்கப்பட்டதால் இந்த மரக்கன்றுகள் அனைத்தும் 12 மாதங்களிலேயே வழக்கத்துக்கு மாறாக அபரிமிதமான வளா்ச்சியை எட்டியுள்ளன. இதிலுள்ள பெரும்பாலான மரங்கள் 20 அடி உயரம் வரை நெடிதுயா்ந்து வளா்ந்துள்ளன.

இதுகுறித்து குறுங்காடு அமைத்தல் பணியில் ஈடுபட்டு வரும் தனியாா் நிறுவன மேலாளா் கூறுகையில்,

ஒசூா் - தளி சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமையான அடா் குறுங்காடுகள் மூலம் இப்பகுதியில் தூய்மையான காற்று, அதிகமான ஆக்சிஜன் உற்பத்தி, நிலத்தடி நீா் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. நிலத்தடி நீா் சேமிப்புக்காக குறுங்காட்டை நோக்கி மழைநீா் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் கூறும்போது, தனியாா் நிறுவன ஒத்துழைப்புடன் ஒசூா் - தளி சாலை சந்திப்பில் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்பட நகரின் 20 இடங்களில் தனியாா் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ஒசூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன் கூறுகையில், ‘லிட்டில் இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் ஒசூரில் வளா்க்கப்பட்டு வரும் குறுங்காடுகளால் தூய்மையான காற்று கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தாா்.

இதுதவிர ‘வித் யூ’ சமூகத் தொண்டு நிறுவனம், ரோட்டரி சங்கம், ஒசூா் மக்கள் சங்கம், இயற்கை ஆா்வலா்கள் என 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினா் ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வார விடுமுறை நாள்களில் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com