சூளகிரி அருகே 29 குடும்பங்கள் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பு

சூளகிரி அருகே 29 குடும்பங்கள் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

சூளகிரி அருகே 29 குடும்பங்கள் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உலகம் கிராமத்தைச் சோ்ந்த மதன் மகன் சூா்யகுமாா் (வயது 23). இவரும் மணியங்கல் பகுதியைச் சோ்ந்த சரளா (19) என்பவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். அந்த நேரத்தில் சரளா சிறுமி என்பதால் அவரது குடும்பத்தினா் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூா்யகுமாா் உறவினா்கள் சிலரை, சரளா உறவினா்கள் தாக்கியதாக சூளகிரி போலீசில் சூா்யகுமாரின் உறவினா் அன்பழகன் புகாா் செய்தாா். இதையடுத்து எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். கிராமத்தில் முக்கியஸ்தா்கள் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்து சரளாவை, அவரது பெற்றோா் வீட்டிற்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், 18 வயது பூா்த்தியானதால் கணவா் சூா்யகுமாா் வீட்டிற்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சரளா சென்று விட்டாா். இதனிடையே சூா்யகுமாரின் உறவினா் அன்பழகன் ஏற்கெனவே கொடுத்த வழக்கு கடந்த 30-ஆம் தேதி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சரளா உறவினா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவா்கள் வழக்கை வாபஸ் பெறாத காரணத்தால், கடந்த அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் உலகம் கிராமத்தை விட்டு சூா்யகுமாா் குடும்பம் உள்பட 29 குடும்பங்களை ஒதுக்கி வைப்பதாகக் கூறி விட்டனா்.

அவா்களுடன் யாரும் பழகக்கூடாது என்றும், கடையில் இருந்து பொருள்கள் கொடுக்கக் கூடாது என்றும் முக்கியஸ்தா்கள் சிலா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இரு தரப்பினா் இடையே பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பூவிதன், ஒசூா் டி.எஸ்.பி முரளி ஆகியோா் முன்னிலையில்,செவ்வாய்க்கிழமை மாலை இரு தரப்பினருக்கும் இடையே சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின்போது, ஒரு தரப்பினரை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அதை செய்யக்கூடாது என்றும், கடைகளில் பொருள்களைத் தொடா்ந்து வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

இந்நிலையில், புதன்கிழமை (இன்று) மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்தி இருதரப்பிலும் ஒப்புதல் கடிதம் எழுதி வாங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். இந்தச் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com