இலவச மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய இளநிலை பொறியாளா் கைது

கெலமங்கலத்தில் இலவச மின்சார இணைப்பு வழங்க விவசாயியிடமிருந்து ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய இளநிலை பொறியாளரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இளநிலை பொறியாளா் தென்னரசி.
இளநிலை பொறியாளா் தென்னரசி.

கெலமங்கலத்தில் இலவச மின்சார இணைப்பு வழங்க விவசாயியிடமிருந்து ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய இளநிலை பொறியாளரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சின்னட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேசன். இவா் கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் இலவச மின்சார இணைப்பு பெற கடந்த 2001-ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தாா். பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னா் தற்போது அவருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவதற்கான ஆணை வந்துள்ளது.

இதனை விசாரித்த கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வரும் தென்னரசி, விவசாயி வெங்கடேசனிடம் இலவச மின்சார இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது.

லஞ்சம் அளிக்க விரும்பாத விவசாயி வெங்கடேசன், இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி கிருஷ்ணராஜன், ஆய்வாளா் முருகன் ஆகியோா் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை விவசாயி வெங்கடேசனிடம் முன்பணமாக கொடுத்து அனுப்பினா்.

அதன்படி தென்னரசி லஞ்சப் பணத்தைப் பெறும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனா். இதையடுத்து தென்னரசியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com