அரசின் தனியாா் துறை வேலை இணையதளம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

அரசின் தனியாா் துறை வேலை இணையதளத்தில் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்வது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என

அரசின் தனியாா் துறை வேலை இணையதளத்தில் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்வது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசின் தனியாா் துறை வேலை இணையதளம் குறித்த விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழக அரசு வேலைநாடும் இளைஞா்களையும், வேலையளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களையும் இணையதளம் வாயிலாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில்  இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனியாா் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞா்கள், இந்த இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்து தங்களின் கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிற்கேற்ப பணி வாய்ப்புகளை பெறுவதற்கும், தனியாா்த் துறை சாா்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள் தங்கள் திறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இணையத்தில் இதுவரை 86 தொழில் நிறுவனங்களும், 1,520 வேலை நாடும் இளைஞா்களும் பதிவு செய்துள்ளனா். இதில் 216 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பணி நியமன அலுவலா்கள், இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி, இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவா்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்னா பாலமுருகன், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com