கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை காக்க வேண்டும்
By DIN | Published On : 20th October 2020 12:19 AM | Last Updated : 20th October 2020 12:19 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கண்காணிப்பு குழுத் தலைவா் அ.செல்லகுமாா் எம்.பி. பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கைச்சூழலையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் வகையில் கனிம வளங்களை ஏலம் விடக் கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து இயற்கை வளங்கள், அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதையும், கடத்தலைத் தடுக்கும் அரசு அலுவலா்கள் தாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு-நகரம் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பதிலாக மாற்று நபா்கள் பயன் பெற்றுள்ளது போன்ற குழப்பங்களுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.செங்குட்டுவன், ஒய்.பிரகாஷ், எஸ்.ஏ.சத்யா, பி.முருகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.பெரியசாமி, ஒன்றியக் குழுத் தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.