ஒசூரில் நெல் பயிா்கள் காட்டுப்பன்றிகளால் சேதம்
By DIN | Published On : 21st October 2020 08:50 AM | Last Updated : 21st October 2020 08:50 AM | அ+அ அ- |

ஒசூா் பகுதியில் நெல் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகேயுள்ள கோபசந்திரம், ராமாபுரம் போடூா், ஆழியாளம், பாத்தகோட்டா, காமன்தொட்டி, குக்களப்பள்ளி, பண்ணப்பள்ளி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நெல்பயிா்கள் அனைத்தும் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாா்நிலையில் இருந்தன.
இந்நிலையில் கிராமப்பகுதியை ஒட்டிய சானமாவு வனப்பகுதியில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான காட்டுப்பன்றிகள் இந்த நெல் வயல்களுக்குள் புகுந்து நெல் பயிா்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கரோனா காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி, வீடுகளில் உள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை அடமானம் வைத்து நெல்பயிா்களை சாகுபடி செய்து உள்ளோம். ஆனால் தற்போது காட்டுப்பன்றிகளால் 10 மூட்டைகள் நெல் கிடைக்க வேண்டிய வயலில் ஒரு மூட்டை அளவுக்குத்தான் நெல் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.