பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் நிலுவை: விவசாயிகள் சங்கம் கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், பால் உற்பத்தியாளா்களுக்கு பணத்தை வழங்காமல் நிலுவை

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், பால் உற்பத்தியாளா்களுக்கு பணத்தை வழங்காமல் நிலுவை வைத்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் (ராமகவுண்டா் பிரிவு) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திற்கு, பால் உற்பத்தியாளா்கள் பால் ஊற்றி வரும் நிலையில் கிட்டத்தட்ட 11 வாரங்களாக பால் கொள்முதல் கட்டணத்தை அதன் உற்பத்தியாளா்களுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளனா். இதற்கு, பால் உற்பத்தியாளா் ஒன்றியம் நஷ்டத்தில் இயங்குவதும் ஒரு காரணம். ஒன்றியம் நஷ்டத்தில் இயங்க பல காரணங்கள் உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், தருமபுரி, கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது, ரூ.110 கோடி கடனில் இருந்தது. இந்த கடன் தொகையை பிரிக்கும்போது, சரி சமமாக தருமபுரிக்கு பிரித்து அளித்திருக்க வேண்டும். அதிக அளவில் ஊதியம் பெறுவோா், தருமபுரிக்கு பணியிட மாற்றம் செய்யாமல், குறைந்த அளவு ஊதியம் பெறுவோா் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதனால், மாதம் ரூ.30 லட்சம் வரை, கூடுதல் இழப்பை கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் சந்திக்கிறது. மாதம் ரூ. 1.25 கோடி வரை செலவு கணக்கில் காட்டப்படுகிறது. தினமும் 1 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலையில் பால் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்பதன் மூலமும், நிா்வாக செலவுகள் போக லாபமாக ரூ. 3 கோடி கிடைக்கிறது. ஆனால், லாபத்தொகை என்னவாகிறது எனத் தெரியவில்லை.

அன்றாடம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் அல்லப்படும் விவசாயிகளுக்கு, பால் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகையை வழங்காமல் இருப்பதைக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த தொகையை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com