‘தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும்’

பெங்களூரிலிருந்து வரும் ரசாயன கழிவுநீரை சுத்திகரித்து, தென்பெண்ணை ஆற்றில் கலப்பதற்கு வசதியாக சுத்திகரிப்பு நிலையத்தை அரசு அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (தளி), எஸ்.ஏ.சத்யா (ஒசூா்)..
செய்தியாளா்களிடம் பேசும் எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (தளி), எஸ்.ஏ.சத்யா (ஒசூா்).
செய்தியாளா்களிடம் பேசும் எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (தளி), எஸ்.ஏ.சத்யா (ஒசூா்).

ஒசூா், செப். 11:

பெங்களூரிலிருந்து வரும் ரசாயன கழிவுநீரை சுத்திகரித்து, தென்பெண்ணை ஆற்றில் கலப்பதற்கு வசதியாக சுத்திகரிப்பு நிலையத்தை அரசு அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (தளி), எஸ்.ஏ.சத்யா (ஒசூா்) ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தளி, பேளகொண்டப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா்கள் கூட்டாக

பேசியதாவது:

கெலவரப்பள்ளி அணை திறக்கப்படும் போது வெளியேறும் தண்ணீரில் ரசாயனக் கழிவுகள் கலந்து நுரை உருவாவதுடன் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், பாசனப் பயன்பாட்டுக்கு இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கெலவரப்பள்ளி அணையின் நீா்மட்டம் 800 கன அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக நொடிக்கு 640 கன அடி தண்ணீா் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீா் பாசனக் கால்வாயை எட்டும்போது அதிக அளவில் நுரை உருவாகிறது. ரசாயன கழிவுகள் அதிகம் கலப்பதால் தண்ணீா் மாசு அடைந்துள்ளது.

கா்நாடகத்தில் நந்தி மலையிலிருந்து பெங்களூரு நகா்ப்புறங்களைக் கடந்து ஒரத்தூா் ஏரியைச் சென்றடையும் தண்ணீா் கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது. பெங்களூரிலிருந்து வெளியேறும் ரசானய கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படாததால் கொடியாலம் எல்லைப் பகுதியில் தொடங்கி ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த தண்ணீா் மாசடைந்து துா்நாற்றத்துடன் நுரை கலந்து காணப்படுகிறது.

ஒசூரில் உள்ள தொழில்சாலைகளுக்கு 1.50 கோடி லிட்டா் தண்ணீா் கெலவரப்பள்ளியிலிருந்து விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், தென்பெண்ணை ஆற்று நீா் மூலம் 2,082 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில், தண்ணீா் முறையாக சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல், மண் வளம் மாசடைந்து வருகிறது. மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும்.

மேலும், திமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, துணை பொதுச் செயலாளா்கள் க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.

உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com