குருபரப்பள்ளி தலைமைக் காவலா் மாரடைப்பால் மரணம்

குருபரப்பள்ளி காவல் நிலைய தலைமைக் காவலா் வேலுமணி (50), மாரடைப்பால் திங்கள்கிழமை நள்ளிரவு மரணமடைந்தாா்.
குருபரப்பள்ளி தலைமைக் காவலா் மாரடைப்பால் மரணம்

குருபரப்பள்ளி காவல் நிலைய தலைமைக் காவலா் வேலுமணி (50), மாரடைப்பால் திங்கள்கிழமை நள்ளிரவு மரணமடைந்தாா். அவரது உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலுமணி (50) பணியில் இருந்தாா். திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உடன் பணியில் இருந்த காவலா்கள் அவரை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்துக்கு திரும்பிய போது, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக, அவரை கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், வேலுமணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வேலுமணியின் சொந்த ஊா் கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்த செல்லம்பட்டி கிராமம் ஆகும். காவல் துறையில் 1995-ஆம் ஆண்டு காவலராக பணியில் சோ்ந்த இவருக்கு, விஜி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா்.

தலைமைக் காவலா் வேலுமணியின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், துணை காவல் கண்காணிப்பாளா்கள் தங்கவேல், சரவணன், காவல் ஆய்வாளா்கள் அன்புமணி (தனிப்பிரிவு), கபிலன், சுப்பிரமணி, ரஜினி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், செல்லம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com