சிறுபான்மையினரிடம் அரசு நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்ஆணையத் தலைவா் தகவல்
By DIN | Published On : 29th September 2020 01:44 AM | Last Updated : 29th September 2020 01:44 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன்.
சிறுபான்மையினரிடம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சிறுபான்மையா் நலத்துறைச் சாா்பில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் தலைமை வகித்தாா். ஆணைய உறுப்பினா் செயலா் சுரேஷ்குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் 97 பயனாளிகளுக்கு ரூ. 15.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் வழங்கினாா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.45 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதில் ரூ. 96.47 லட்சத்துக்கான கடனுதவி வழங்க விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்பட்டு, டாம்கோ கழகத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நவம்பருக்குள் அனைவருக்கும் கடனுதவி வழங்கும் வகையில், கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கம் சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய பெண்கள், விதவைகள் உள்ளிட்ட 879 பெண்களுக்கு ரூ. 23 லட்சத்து 98 ஆயிரத்து 480 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நிகழ் ஆண்டுக்கு வரப்பெற்ற இணை மானியத் தொகையில் 77 இஸ்லாமிய பெண்களுக்கு ரூ. 8 லட்சத்து 55 ஆயிரத்து 50 மதிப்பில் உதவித்தொகை மற்றும் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு, மிக அதிகமான திட்டங்களை சிறுபான்மையினா் துறைக்குச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அதுதொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு மிகவும் குறைவாக உள்ளது.
எனவே, அரசு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்பது குறித்து சிறுபான்மையினருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின அமைப்புகளின் தலைவா்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் பெரியசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலா் அமீா்பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.