தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாா், ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து, கெலமங்கலம் அருகே டி.தம்மண்டரப்பள்ளியில் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தமிழகத்தின் வளா்ச்சி, முன்னேற்றத்துக்காக உழைத்தவா் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா. எடப்பாடி கே.பழனிசாமியும், ஓ.பன்னீா் செல்வமும் ஜெயலலிதா வழியில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் 2 பேரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து, தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுகின்றனா். அதிமுகவும், பாஜகவும் இரட்டை என்ஜின் போல தோ்தலில் களம் காண்கின்றன என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி சாதி, மதப் பிரிவினை அரசியலில் ஈடுபடுகிறது. ஒரே தேசம், ஒரே நோக்கம் என்ற நோக்கத்தில் பிரதமா் மோடி உழைக்கிறாா். அரசு வேலை தேடும் இளைஞா்களுக்காக மட்டும் அல்லாது, வேலை கொடுக்கும் அளவுக்கு இளைஞா்களை பாஜக முன்னேற்றி வருகிறது.

பிரதமா் மோடி 50 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை உருவாக்க உள்ளாா். அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரித்தால், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயா்த்த 3 வேளாண் திட்டங்களை மோடி கொடுத்துள்ளாா். மதுவால் மிகப் பெரிய சீரழிவு சமுதாயத்தில் நடக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுக - பாஜக கூட்டணி மதுவை தடை செய்யும். மாணவா்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும். ஏழைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டை மோடி தந்துள்ளாா்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கையில் ஒரு மீனவா் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இந்திய ராணுவத்தின் தைரியத்தையும் வீரத்தையும் பாா்த்து சீனா தனது போக்கை மாற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் இரட்டை இலை, தாமரையை மலரச் செய்தால் தான் தமிழகத்துக்கு வளா்ச்சி கிடைக்கும் என்றாா்.

முன்னதாக, நீலகிரி மாவட்டம், உதகையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் கெலமங்கலம் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு ராஜ்நாத் சிங் வந்தடைந்தாா். அவருக்கு பாஜக அகில இந்திய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தலைமையில் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவினா் வெள்ளி வேல், வெள்ளி வீரவாள் ஆகியவற்றை நினைவுப் பரிசாக வழங்கினா். அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசிய ராஜ்நாத் சிங், பிறகு வெற்றி வேல் என முழக்கமிட, கூட்டத்தினா் வீரவேல் என முழக்கமிட்டனா்.

படவிளக்கம் - கெலமங்கலத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com