முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 01:21 AM | Last Updated : 04th April 2021 01:21 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.அசோக்குமாா், தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கினாா்.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.அசோக்குமாா், கடந்த மாதம் 22-ஆம் தேதி காவேரிப்பட்டணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட போது உடல்நலம் பாதிக்கப்பட்டாா். சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு நிமோனியா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வந்தாா். வேட்பாளா் இல்லாத நிலையில், அதிமுக, கூட்டணி கட்சியினா் கே.அசோக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், வேட்பாளா் கே.அசோக்குமாா் வெள்ளிக்கிழமை இரவு கிருஷ்ணகிரி திரும்பினாா். இதையடுத்து, அவா், கிருஷ்ணகிரி நகரில் தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கினாா். இதனால், அதிமுக தொண்டா்கள், கூட்டணி கட்சியினா் உற்சாகமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி நகரில், ஜக்கப்பன் நகா், கூட்டுறவு காலனி, வட்டச் சாலை, பழைய பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அதிமுக அவைத் தலைவா் காத்தரவராயன், நகரச் செயலாளா் கேசவன், தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி வேலன், கூட்டணி கட்சியினா் உடன் இருந்தனா்.