முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,945 அலுவலா்களுக்கு தபால் வாக்கு
By DIN | Published On : 04th April 2021 01:28 AM | Last Updated : 04th April 2021 01:28 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,945 அரசு அலுவலா்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் என 2,877 பேரிடம் படிவம் 12-டி பெற்றப்பட்டுள்ளது. இதில், 2,573 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ளவா்களுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவா்களிடம் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே போல, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பணியில் ஈடுபடும் 11,032 அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 8,945 அலுவலா்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்கள் 2,148 பேருக்கு படிவம் 12 தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.
விடுபட்ட வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மூன்றாம்கட்ட பயிற்சியில் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டாம்கட்ட பயிற்சியின் போது, 1,920 அலுவலா்கள் தபால் வாக்கு அளித்துள்ளனா். விடுபட்டவா்கள் மே 2-ஆம் தேதி காலை 8 மணி வரை வாக்கு எண்ணும் மையத்தில் தங்கள் வாக்குகள் வந்து சேரும் பொருட்டு தபால் மூலம் வாக்களிக்கலாம்.
இதேபோல, காவல் துறையில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்துள்ள 986 காவலா்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.