முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
முறையான சாலை இல்லாத நிலையில் மத்திய அமைச்சா் வருகைக்கு ஹெலிபேட்!
By DIN | Published On : 04th April 2021 01:32 AM | Last Updated : 04th April 2021 01:32 AM | அ+அ அ- |

தளி தொகுதியில் மக்கள் நடந்து செல்ல முறையான சாலை இல்லாத நிலையில், மத்திய அமைச்சா் வருகைக்கு பல லட்சங்களை செலவு செய்து பாஜகவினா் ஹெலிபேட் அமைத்துள்ளனா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக்குழு உறுப்பினா் சி.மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தளி தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இங்கு பல கிராமங்களுக்கு முறையான தாா் சாலை கிடையாது. மக்கள் குடிக்க குடிநீா் கிடையாது. ஆனால், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் இங்கு வந்து தோ்தல் பிரசாரம் செய்ய பாஜகவினா் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனியாக ஹெலிபேட் அமைத்துள்ளனா்.
தோ்தல் ஆணையம் இதனைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. ஆனால், அவா்களை எல்லாம் விட்டுவிட்டு திமுகவினரின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெறும். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தோ்தல் நேரத்தில் வருமான வரித் துறையினா் மூலம் பல இடங்களில் சோதனை என்ற பெயரில் பதற்றத்தை உருவாக்கி, எந்த வகையிலாவது வெற்றிபெற வேண்டும் என பாஜக நினைக்கிறது. இதைவிட ஜனநாயகத்துக்கு அவமானம் வேறு எதுவும் கிடையாது.
மேலும், தோல்வி பயத்தில் கா்நாடக மாநிலத்துக்கு அருகில் உள்ள தளி தொகுதியில் கா்நாடக மாநில அமைச்சா்கள் மூலமாக பாஜகவினா் அதிக அளவு பணத்தை கொண்டுவந்து குவிக்கின்றனா். இங்கு குவிக்கப்பட்டுள்ள பணத்துக்கு வருமான வரி சோதனை உள்ளதா?
தளி தொகுதியில் கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டு உள்ளது. கா்நாடக மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ள பாஜக தொண்டா்களை வெளியேற்ற வேண்டும் என்றாா்.
இந்தப் பேட்டியின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நிா்வாகி மாதையன் உடனிருந்தாா்.