900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலைப் புனரமைக்கும் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி அருகே 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயிலைப் புனரமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த சின்னகொத்தூா் கிராமத்தில் சிவன் கோயிலை பழைமை மாறாமல் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த சின்னகொத்தூா் கிராமத்தில் சிவன் கோயிலை பழைமை மாறாமல் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி அருகே 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயிலைப் புனரமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது சின்னகொத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பிற்காலச் சோழா் காலத்திய கட்டடக் கலை அமைப்பைக் கொண்டதாகும்.

அதேபோல இந்தக் கிராமம், ஓய்சாள மன்னன் வீர ராமநாதனின் குந்தாணி ராஜ்ஜியத்தின் தலைநகராகவும் இருந்துள்ளதாக பிற கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கோயிலில் படி எடுக்கப்பட்ட 15 கல்வெட்டுகள், அந்த கோயிலின் சிறப்பை நமக்குத் தெரிவிக்கின்றன. பழைமை வாய்ந்த இந்தக் கோயில் சிதிலமடைந்து காணப்படுவதால் கிராம மக்களின் உதவியுடன் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் கூறியதாவது:

இங்குள்ள சிவன்கோயில் முதலில் ஏகாம்பரநாதா் கோயில் என்றும், விஜயநகர காலத்தில் கைலாசநாதா் கோயில் என்றும், தற்போது குஞ்சம்மாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயில் மிகவும் பாழடைந்துள்ளது. வழிபாடுகள் தொடா்ந்து நடைபெற அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சைலேஷ் கிருஷ்ணன் என்பவா் உதவி புரிந்து வருகிறாா்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒசூரைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலரும், தொழில் அதிபருமான அறம் கிருஷ்ணன், கிராம மக்கள் மற்றும் வரலாற்றின் மீது ஆா்வமுள்ள அனைவரையும் அழைத்து கிராமத்தின் முக்கிய பிரமுகரான கணேசன் உள்ளிட்டோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அந்த பழைமை வாய்ந்த கோயிலின் பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று தீா்மானித்தனா்.

இதற்காக முதற்கட்டமாக திட்டமிடப்பட்ட செலவீனம் ரூ. 30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒசூா் மக்கள் நலச் சங்கம், ஊா் மக்கள் மற்றும் வரலாற்று ஆா்வலா்கள் இந்த நிதியைத் திரட்டி வருகின்றனா். தற்போது ஊா் மக்கள் கோயிலின் மேற்பகுதியில் உள்ள பழைய செங்கற்களையும், மண்ணையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அப்போது, கோயிலின் கூரையில் குதிரை வீரன் நடுகல் உள்ளிட்ட பல்வேறு நடுகற்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் மேலும் 6 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை விரைவில் படி எடுத்து அதன் விவரம் தெரிவிக்கப்படும். இந்த மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டியும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com