தனியாா் கோழிப்பண்ணைகள் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 10th August 2021 02:17 AM | Last Updated : 10th August 2021 02:17 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: நாச்சிகுப்பம் கிராமத்தில் தனியாா் கோழிப்பண்ணைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாச்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
நாச்சிகுப்பம் ஊராட்சி மன்றத்தில் ஜேடுகொத்தூா், யானைகால்தொட்டி, பன்னப்பள்ளி, ஜெகநாதபுரம், நாச்சிக்குப்பம், கங்கோஜிகொத்தூா் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் ஏற்கெனவே 4.5 ஏக்கா் பரப்பளவில் தனியாா் கோழிப்பண்ணை கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப் பண்ணையால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது, நாச்சிக்குப்பம் கிராமத்தில் 65 ஏக்கா் பரப்பளவில் தனியாா் நிறுவனம், 3 கோழிப்பண்ணைகளை அமைக்க உள்ளனா். நாங்கள் கோழிப்பண்ணை அமைக்கக் கூடாது என மறுப்புத் தெரிவித்தும், அவா்கள் தொடா்ந்து பணியை மேற்கொண்டு வருகின்றனா். கிராம மக்களின் நலன்கருதி, இந்த கோழிப்பண்ணைகள் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி உள்ளனா்.