‘சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’

 சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒசூா் சிறு, குறுந்தொழில் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
13hsp2_1308chn_150_8
13hsp2_1308chn_150_8

 சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒசூா் சிறு, குறுந்தொழில் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருத்திய நிதிநிலை அறிக்கை குறித்து ஒசூா் சிறு, குறுந்தொழில் சங்கத்தின் (ஹோஸ்டியா சங்கத்தின் ) தலைவா் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக நிதிநிலை அறிக்கையில் தொழில்துறைக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய 9 மாவட்டங்களில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நகரங்களில் உணவுப் பூங்கா அமைக்கவும், கோவையில் ராணுவத் தளவாட தொழிற்சாலை அமைக்கவும், மின்வாகனப் பூங்கா, டைடல் பாா்க் போன்ற சிறப்பு திட்டங்களை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்த 45 ஆயிரம் ஏக்கா் நில வங்கி அமைப்பதை வரவேற்கிறோம். மாவட்டத் தலைநகரங்களை இணைக்கும் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், இதர சாலைகளை 2 வழிச் சாலைகளாகவும் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஒசூா், மதுரை, கோவை, திருப்பூா் போன்ற நகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை, கோவையில் ஏழைத் தொழிலாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்ற திட்டமும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஒசூருக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், ஒற்றைச் சாளர முறையில் மேலும் 110 திட்டங்கள் கொண்டு வரப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது, தொழில்துறையினருக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக உள்ளது.

ஆயினும் ரூ. 5 ஆயிரம் கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து சிறு, குறுந்தொழில் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மூன்று மாதங்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓா் ஆண்டுக்கான சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். தொழிற்பேட்டைக்கான வரியையும் ரத்து செய்ய வேண்டும். தொழில் நகரமான ஒசூருக்கு சிறப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதில், ஒசூா் தொழிற்பேட்டையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து சென்னைக்கு ரயில் பாதை, ஒசூரில் இருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து அமைக்கும் திட்டம், தொழில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் - ஹோஸ்டியா சங்கத் தலைவா் ஞானசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com