கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 17th August 2021 09:16 AM | Last Updated : 17th August 2021 09:16 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒசூரைச் சோ்ந்த பெண் தீக்குளிக்க முயற்சியில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் சானசந்திரம் கிராமத்தை சோ்ந்தவா் கயல்விழி(42). இவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் காா் நிறுத்தும் இடம் அருகே, தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனா். இதையடுத்து அவா் போலீஸாரிடம் தெரிவித்தது:
நான் ஏலச்சீட்டு நடத்தி வந்தேன். இதில் 14 போ் என்னிடம் சீட்டு எடுத்துவிட்டு பணம் கட்டாமல் ஏமாற்றி விட்டனா். இதனால் சீட்டு எடுத்த 9 பேருக்கு என்னால் பணம் தரமுடியவில்லை. இவா்கள் 9 பேரும் என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்து வருகின்றனா். இந்த பிரச்னையால் என் கணவா் கடந்த 15 நாள்களாக வீட்டிற்கே வருவதில்லை. என்னுடைய மூன்று மகன்களும் எங்களை கண்டு கொள்வதில்லை. பணம் கட்டியவா்கள் தினமும் ரவுடிகளுடன் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன் என்று அவா் தெரிவித்தாா்.