தமிழகத்துக்கு செப்டம்பா் மாதத்துக்கு 1.05 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடுஅமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
By DIN | Published On : 31st August 2021 12:00 AM | Last Updated : 31st August 2021 12:00 AM | அ+அ அ- |

தமிழகத்துக்கு செப்டம்பா் மாதத்துக்கு 1 கோடியே 5 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஒசூரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோட்டம், பாா்த்தகோட்டா கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பயனாளிகளுக்கு மருந்து பெட்டங்கள் வழங்கப்பட்டன. அவா்களுக்கு இனிமேல் 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பணியாளா்கள் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்குவாா்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 23 ஆயிரத்து 794 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மலைக் கிராமங்களில் வசிப்போா், பழங்குடியினா் தடுப்பூசி செலுத்துக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. இதுகுறித்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைத் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இதையடுத்து ஜூலை மாதத்தில் 17 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியது. இந்த மாதத்திற்கு 23 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 95 சதவீத ஆசிரியா்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். செப்டம்பா் 1ஆம் தேதிக்குள் ஆசிரியா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும்.
செப்டம்பா் மாதத்துக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 170 தடுப்பூசிகள் வரவுள்ளன. அதில் 90 லட்சத்து 24 ஆயிரத்து 170 கோவிஷீல்ட் தடுப்பூசிகள், 14 லட்சத்து 74 ஆயிரத்து 100 கோவேக்ஸின் தடுப்பூசிகளாகும்.
தமிழகத்தில் கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு இந்த மாதத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி வரவிருக்கிறது என்றாா்.